நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படமானது ஜெயிலர் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் ஜெயிலர் படத்தில் நடித்த முக்கிய நடிகர்களோடு பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக மாலத்தீவுக்கு சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பி இந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். ஜெயிலர் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினை பெற்றிருந்த வேளையில் இந்த இசை வெளியீட்டு விழாவானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஏற்கனவே அண்ணாத்த படத்தின் தோல்வியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பிரேக்குக்காக காத்திருந்த ரஜினி இந்த ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க காத்திருக்கிறார். அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இந்த ஜெயிலர் பட ஆடியோ லான்ச் விழாவில் ரஜினி எப்போது என்ட்ரி கொடுப்பார் என்று அனைவரும் காத்திருந்த வேளையில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் கவினும் ரம்யாவும் தொகுத்து வழங்கி இருந்தனர்.

அதன்படி இந்த படத்தில் நடித்திருந்த சிவராஜ்குமார், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருவராக அரங்கிற்குள் நுழைந்த வேளையில் ரஜினி ஒரு மாஸ் என்ட்ரியுடன் ஹுக்கும் பாடல் ஒலிக்க சன் பிக்சர்ஸ் உரிமையாளரான கலாநிதி மாறனுடன் ஒன்றாக அரங்கிற்கு மிரட்டலான வருகையை தந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரங்கிற்குள் நுழைந்ததுமே அவருக்கு உற்சாக வரவேற்பு ரசிகர்களின் மூலம் கொடுக்கப்பட்டது. அதோடு தனது வழக்கமான பாணியில் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணங்கியபடியே ரசிகர்களை வரவேற்றபடி ரஜினி அரங்கிற்குள் நுழைந்தார்.
மேலும் வழக்கம் போல தனது முழுமையான எனர்ஜியுடன் அரங்கிற்குள் வந்த அவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களையும், இசையமைப்பாளர் அனிருத்தையும் கட்டித் தழுவிய படி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன் பிறகு அவர் வந்து இருக்கையில் அமரும் வரை கரகோஷங்கள் ஓயவில்லை. அதோடு இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணன், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா உட்பட குடும்பத்தார் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





