நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆரம்ப நாட்களில், பஸ் கண்டக்டராக ரஜினிகாந்த் இருந்தார். அவரது பெயர் அப்போது சிவாஜி ராவ். அவரது நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் நாடகங்களில் நடிப்பார். அப்போது சிவாஜி ராவும் அவருடன் நாடகங்களுக்கு செல்வார்.
அப்படி ஒருமுறை நாடகத்துக்கு சென்ற போது, ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வேண்டிய நடிகர் வராததால் அந்த கேரக்டரில் ரஜினியை நடிக்குமாறு, நண்பர் ராஜ்பகதூர் வற்புறுத்தினார். அப்போது ரஜினி நடித்த ஸ்டைலான நடிப்பை பார்த்து விட்டு, ரசிகர்கள் அனைவருமே அசந்து போய்விட்டனர்.
அதன்பிறகுதான் ரஜினிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையே வந்தது. சென்னைக்கு நடிக்க வந்த பிறகு சிவாஜி ராவை, ரஜினிகாந்த் என பெயர் மாற்றியது இயக்குனர் கே பாலசந்தர்தான். ஏனெனில் தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடிகர் சிவாஜி கணேசன் இருந்தார். அதுவும் இந்த பெயர் மாற்றத்துக்கு முக்கிய காரணமாகி விட்டது.
கர்நாடகாவில் சிறுவயதில் இருந்தே தனது உடன் பிறந்த அண்ணன் சத்யநாராயணா ராவ் ஆதரவில், அரவணைப்பில் வளர்ந்தவர்தான் ரஜினிகாந்த். எப்போதுமே ரஜினிகாந்த் வீட்டு விசேஷங்களில் முதலிடமும், முக்கியத்துவமும் அவரது அண்ணன் சத்யநாராயணா ராவுக்கு வழங்கப்படும். தன் அண்ணன் மீது மிகுந்த மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறது ரஜினிகாந்த் குடும்பம்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா ராவை பல இயக்குனர்கள் பலமுறை சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் இருந்தே அழைத்தனர். ஏனெனில் ரஜினியின் உடன் பிறந்த சகோதரர் என்ற அடையாளமே அவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகளை தேடிக்கொண்டு வந்தது. ஆனால் அவர் நடிக்க சம்மதிக்கவில்லை.
ஆனால் இப்போது மாம்பழத் திருடி என்ற படத்தில், ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்த படத்தின் இயக்குனர் ஏஆர் ரசீம் கூறுகையில், முதலில் இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதிக்கவில்லை. ஆனால் கதையை கேட்ட பிறகு ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் எங்களுக்கு அவர் நிறைய செலவு செய்தார். இந்த படத்தில் ரஜினியின் அண்ணன் நடித்திருப்பது கடவுள் தந்த பரிசாகவே கருதுகிறேன், என்று அவர் கூறியிருக்கிறார்.





