மாநகரம் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் கைதி. கார்த்தி நடித்த இந்த படம் முழுக்க முழுக்க இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. இதற்காக 57 இரவுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அரை நாள் மட்டுமே பகலில் ஷூட் நடத்தப்பட்டது.
இந்த படத்தில் கதாநாயகி கிடையாது. பாடல் காட்சிகள் கிடையாது. படம் முழுக்க சண்டை காட்சிகள், ரேஸிங் காட்சிகள், ஸ்டேஷனுக்குள் நுழையும் வில்லன் கூட்டம் என படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரில்லிங் ஆக இருந்தது. ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது.
பெரிய வெற்றியை பெறும் படங்களை 2ம் பாகமாக உருவாக்குவது இப்போது தமிழ் சினிமாவில் பேஷனாகி விட்டது. அல்லது படத்தை எடுக்கும்போதே 2ம் பாகம் என்ற எண்ணத்துடன் திரைக்கதையை உருவாக்கும் மனநிலைக்கு இயக்குனர்கள் வந்துவிட்டனர். ஆனால் பல 2ம் பாகம் படங்கள் சொதப்பி விடுகின்றன.
இப்போது கூலி படப்பிடிப்பில் உள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு கைதி 2 படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகிறார். கார்த்தி நடிப்பில் கைதி 2 படம் உருவாகும் நிலையில் மற்ற நடிகர்கள் தேர்வும் நடக்க உள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகை ரஜிஷா விஜயன். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்திலும் தனுஷ் நடித்த கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஜெய்பீம் படத்திலும் ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் தரும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார்.
இப்போது சர்தார் 2 படத்திலும் கார்த்திக்கு அவர் ஜோடியாக நடித்துவரும் நிலையில், கைதி 2 படத்திலும் 3வது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கைதி படத்தில் கதாநாயகி இல்லாத நிலையில், கைதி 2 படத்தில் கதாநாயகி கேரக்டரை லோகேஷ் கனகராஜ் கொண்டு வருகிறார். இதற்காக நடிகை ரஜிஷா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.





