தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றை புரட்டினால், அதில் நிச்சயமாக மக்கள் நாயகன் ராமராஜனை தவிர்க்கவே முடியாது என்கிற அளவுக்கு, அவரது சாதனைகள் மிக அதிகம். அவரது படங்களை இப்போதும் ரசித்து பார்க்க முடியும். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், என்னை பெத்த ராசா போன்ற படங்களை இப்போதும் ரி ரிலீஸ் செய்தால் வசூல் அள்ளும்.
தமிழ் சினிமாவில் ராமராஜன், 1980களின் இறுதியிலும், 1990களிலும் மிக முக்கியமான இடத்தில் இருந்தார். கங்கை அமரன் இயக்கத்தில் அவர் நடித்த கரகாட்டக்காரன் படம், 365 நாட்கள் பல தியேட்டர்களில் ஓடியது. ரஜினி, கமல் படங்கள் 200 நாட்களை தாண்டாத நிலையில், 365 ஓடிய ராமராஜன் படம் கரகாட்டக்காரன். எப்போதுமே கிராமங்களில் ராமராஜன் படங்களுக்கு செம வரவேற்பு இருந்தது.
கடந்த 1980களில் மிக முக்கியமான முன்னணி நடிகையாக இருந்தவர் நளினி. விஜயகாந்த், சத்யராஜ், மோகன், பிரபு, முரளி, கார்த்திக் என அப்போதைய முன்னணி ஹீரோக்களின் நாயகியாக வலம் வந்தவர் நளினி. உதவி இயக்குனராா பணிபுரிந்த ராமராஜனுக்கும், நளினிக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், நளினி குடும்பத்தினர் ராமராஜனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 1987ம் ஆண்டில் இருவரும் ஓடிப் போய் திருமணம் செய்துக்கொண்டனர்.
ராமராஜன் – நளினி திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருந்த நிலையில், மகன் மற்றும் மகளுக்கு பெற்றோராகினர். ராமராஜன் நடிகராகி பெரிய அளவில் முன்னணி நடிகரானார். ஆனால் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த ஒரு கட்டத்தில் ராமராஜன், நளினி திடீரென பிரிந்து விட்டனர். இது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் பிரிவுக்கு பிறகு, இப்போதும் நளினி, ராமராஜன் பேசிக்கொள்கின்றனர். மகன், மகள் சார்ந்த விசேஷ நிகழ்வுகளில் ஒரு தந்தையாக ராமராஜன் கலந்துக் கொள்கிறார். கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ராமராஜன், 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் சாமானியன் படம் மூலம் நடிக்கவும் வந்துவிட்டார். எப்படியும் சில ஆண்டுகளுக்கு 2வது இன்னிங்க்ஸ் ஆடுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை நளினி கூறுகையில், நான் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ராமராஜன்தான் எனக்கு கணவராக வாய்க்க வேண்டும். இப்போதும் நானும் அவரும் பேசிக் கொள்கிறோம். எங்களுக்கு நேரம் சரியில்லை. இருவரும் பிரிந்து இருந்தால் நல்லது. பிள்ளைகள் பிறந்து தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை என்று ஜாதகத்தில் உள்ளது. ஜாதகத்தில் அவருக்கு நம்பிக்கை அதிகம். ஜாதக ரீதியான காரணங்களால்தான் நாங்கள் பிரிந்தோம் என்று நளினி அதில் கூறியிருக்கிறார்.





