சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக, பல நடிகைகள் எல்லை மீறிய கவர்ச்சியில் நடிக்கின்றனர். அதுவும் கடந்த 20, 25 ஆண்டு கால தமிழ் சினிமாவில், இது மிகப்பெரிய வளர்ச்சியாகவே இருந்து வருகிறது. கருப்பு -வெள்ளை படங்கள் வந்த காலத்தில், நடிகைகளின் கவர்ச்சி முக அழகிலும், அவர்கள் காட்டும் நவரச நடிப்பிலும் மட்டுமே இருந்தது. ஒரு கட்டத்துக்கு பிறகு, உடல் அழகை அப்பட்டமாக காட்டி நடிப்பது, கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக இருந்து வருகிறது.
அதனால், கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகளை எளிதாக யாரும் அநாகரிக வார்த்தைகளால் மிக கடுமையாக விமர்சித்து விடுகின்றனர். அதுவும் அரசியல் மேடைகளில், தேர்தல் பிரசார சமயங்களில் ஒருவரை ஒருவர் வசைபாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சினிமா நடிகர், நடிகையரே சில வேளைகளில், கட்சி தலைவர்களாக மாறிய நடிகர்களை மேடையில் கடும் வார்த்தைகளால் விளாசித் தள்ளுவது வழக்கமாக நடந்து வருகிறது.
ஆனால், அதே வேளையில் நடிகைகளை பற்றி விமர்சிக்கும் போது, தனிப்பட்ட அவர்களது வாழ்க்கையை பாதிக்கும், அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது மிக மிக தவறானது. அந்நிலையில், ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள நடிகை ரோஜாவை, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, மிக அவதூறாக பேசியது ஆந்திரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுவும், ஆளுங்கடசியில் அமைச்சராக உள்ள ஒரு குடும்பத் தலைவியை, சமுதாயத்தில் மதிப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் ரோஜாவை ஆபாச படத்தில் நடித்தவர் என்று அவர் அநாகரிகமாக விமர்சித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மகளிர் ஆணையம் அளித்த புகாரை அடுத்து பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.
பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியின் இந்த அநாகரிக விமர்சனம் குறித்து ரோஜா, கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவேன் எனவும் தெரிவித்தார். ரோஜாவை கடுமையாக விமர்சனம் செய்த பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியை கண்டித்து நடிகை குஷ்பு, நடிகை ராதிகா ஆகியோர் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டது வைரலானது.
இதைத் தொடர்ந்து படையப்பா படம் மூலம், நீலாம்பரியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ரம்யா கிருஷ்ணனும், இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், பெண்ணை மதித்து போற்றும் இந்தியாவில் தான் சிலர், இப்படி பெண்களை அசிங்கமாக பேசி அவமானப்படுத்துகின்றனர். ரோஜாவை மிக மோசமாக விமர்சித்த அந்த நபரை சும்மா விடக்கூடாது. அவரை யாரும் மன்னிக்கவும் கூடாது. ரோஜா போன்றவர்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன், என்று அவரது டிவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார். அது, இப்போது வைரலாகி வருகிறது.





