செம்மர கடத்தலை கதைக்களமாக கொண்டு கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா சுனில் பகத் பாசில் நடிப்பில் இந்த படம் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. தெலுங்கில் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தமிழில் இந்த படம் சக்கைப் போடு போட்டது.
இதையடுத்து புஷ்பா படத்தின் 2ம் பாகம் உருவானது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம், படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, வருகிற டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா முதல் பாகத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அல்லு அர்ஜூன், மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது பெற்றார்.
அதே போல் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஸ்ரீ வள்ளி, சாமி சாமி, ஊ சொல்றியா மாமா போன்ற பாடல்கள் பெரிய அளவில் டிரண்டிங் ஆகின. அதிலும் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா ஐட்டம் பாடல் பெரிய அளவில் வைரலானது. புஷ்பா 1 படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்.
அதே போல் புஷ்பா 2 படத்திலும் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்துள்ளார். ஆனால் பின்னணி இசையை தமன் செய்து வருகிறார் என்று தெரிய வந்துள்ளது. பிஜிஎம் திருப்தியாக இல்லாததால் அந்த விவகாரத்தில் டிஎஸ்பிக்கு பதில் தமன் பின்னணி இசை அமைப்பதாக கூறப்படுகிறது. புஷ்பா 1ல் சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் போல, 2ம் பாகத்தில் ஸ்ரீ லீலா ஐட்டம் பாடலில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதில் முதல்கட்டமாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த காட்சிகளுக்கு டப்பிங் நடந்துள்ளது. டப்பிங்கில் பங்கேற்று பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, அப்போது எடுத்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அந்த பதிவில் ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது, புஷ்பா 2 படத்தின் முதல் பாதி டப்பிங் முடிந்துவிட்டது. இப்போது இரண்டாம் பாதி டப்பிங் நடந்து வருகிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிக பிரமாதமாக உள்ளது. என் வாழ்வில் சிறந்த அனுபவமாக இந்த படம் அமைந்துவிட்டது. ஆனால் என் முகம் இப்படி சோகமாக புகைப்படத்தில் இருக்க காரணம், ஷூட்டிங் முடிந்துவிட்டதே என்பதுதான், என்று அதில் கூறியிருக்கிறார்.





