அமரன் மதராஸி படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் பராசக்தி. வருகிற ஜனவரி 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. கடந்த 1960களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதைக் களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இதில் வில்லனாக நடிகர் ரவி மோகன் நடித்திருக்கிறார்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அதர்வா இருவரும் அண்ணன் தம்பியாக நடித்துள்ளனர். இந்த படம் அதர்வாவுக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பரதேசி படத்துக்கு பிறகு அதர்வா நடித்த படங்கள் எதுவுமே பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெறவில்லை.
இந்நிலையில் பராசக்தி படம் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டது. அதனால் சமீபத்தில் தணிக்கை சான்றிதழுக்காக பராசக்தி படத்தை தணிக்கைக்கு அனுப்பியிருந்தனர். பராசக்தி படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள், சில காட்சிகளை கோடிட்டு காட்டி அவற்றை நீக்குமாறு கூறியுள்ளனர்.
இதற்கு இயக்குனர் சுதா கொங்கரா கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்து இருக்கிறார். அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கினால் கதையின் ஜீவனே போய் விடும் என்று தணிக்கை குழுவிடம் புலம்பி இருக்கிறார். ஆனால் தணிக்கை குழு சம்மதிக்க மறுத்த நிலையில் மீண்டும் பராசக்தி படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பராசக்தி படத்தில் வன்முறை காட்சிகள் ஆபாச காட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் படத்தின் கதைக்களம்தான் சென்சார் போர்டுக்கு பெரிய பிரச்னையாக இருந்துள்ளது. இந்த படம் இந்தி திணிப்பு எதிர்ப்பு படமாக இருப்பதால் அது ஆளுங்கட்சி பாஜகவுக்கு எதிர்ப்பான ஒரு படமாக கருதப்படுகிறது.
ஏனென்றால் வடமாநில மக்கள் அதிகளவில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதால் இந்தி திணிப்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தி திணிப்பு என்பது 1960ம் ஆண்டுகளில் மட்டுமல்ல, இப்போதும் அது நிஜத்தில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதனால் இந்த படம் வெளியானால் இன்றைய சூழலோடு மக்கள் ஒப்பிட்டு பார்க்க அதிக வாய்ப்புள்ளதால் இந்த படத்துக்கு நிறைய இடங்களில் சென்சார் கத்திரி போட்டிருப்பதாக கூறப்படுகிறது.





