தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ் இந்தி சினிமாவிலும் ரசிகர்களின் கவனம் பெற்ற முக்கிய நடிகையாக இருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். தமிழில் நடிகர் விஜயுடன் வாரிசு நடிகர் கார்த்தியுடன் சுல்தான் ஆகிய படங்களில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார்.
தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களில் ஸ்ரீவள்ளி கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடித்து இந்திய அளவில் கவனம் பெற்ற முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.
நேஷனல் க்ரஷ் என அழைப்படும் ராஷ்மிகா மந்தனா இந்தியில் அனிமல் என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பாலிவுட் ரசிகர்களை திணறடித்தார். அந்த படத்தில் உதட்டு முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் மிகவும் நெருக்கமாக நடித்து இந்தியிலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு வரவேற்பை அவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் பெங்களூருவில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இந்த விழாவில் கன்னட திரையுலகம் சார்ந்த நடிகர் நடிகையர் பலரும் பங்கேற்கவில்லை. அதுவும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவும் பங்கேற்கவில்லை. இவரது பூர்வீகம் கர்நாடக மாநிலம், கன்னட மொழி பேசுபவர் என்பதும், கன்னட மொழி படத்தில்தான் முதலில் நடிகையாக அறிமுகமானார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது சொந்த மாநிலத்தை, சொந்த மொழியை மதிக்காமல் பெங்களூருவில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் பங்கேற்காமல் பலமுறை அழைத்தும் வராமல் புறக்கணித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவை பலரும் விமர்சித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கன்னிகா என்பவர், அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் மிரட்டல் தொனியில் பேசியிருந்தார். கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவக்குமாரும் இதை கண்டித்திருந்தார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, கொடவா சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் அந்த கொடவா சமூகம் சார்ந்த அமைப்பினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில், கொடவா பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்து உழைப்பால் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, அதில் கூறியிருக்கின்றனர்.





