நடிகர் சூர்யா நடித்த அவரது 44வது படம் ரெட்ரோ வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது. நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றன. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் ஜெயராம் நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் திரைக்கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கண்ணாடி பூவே கனிமா ஏ ஒன் போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
ரெட்ரோ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக தகவல் வெளியான நிலையில், நேற்று இந்த விழாவிற்கு ரஜினிகாந்த் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, நான் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. உங்களின் இந்த அன்பு இருந்தால் போதும் எப்போதுமே நான் நன்றாக இருப்பேன். வாழ்க்கை எப்போதுமே அழகானது.
வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையை நம்பினால் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்பு வரும்போது அதை தவற விட்டு விடாதீர்கள். அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில்தான் வாய்ப்பு வரும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எல்லாருமே ஜெயிக்கலாம். அனைவருக்குமே அழகான வாழ்க்கை இருக்கும்.
நடிகராக இருந்த என்னை ஜெயிக்க வைத்து அகரம் என்ற பவுண்டேஷன் ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான். நான் தனி ஆளாக அதை செய்யவில்லை. நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் அதை பண்ண முடிந்தது. தற்போது அகரம் பவுண்டேஷன் மூலம் 10 ஆயிரம் தம்பிகள் பட்டதாரி ஆகியிருக்கிறார்கள். இன்னும் பல ஆயிரம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நடிகர் சூர்யா அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





