சினிமா துறையில் அடிக்கடி நடிகர்கள் மீது, இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் பல நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்கள் மிக மோசமாக அடிபட்டுள்ளது. இதனால் அவர்களது சினிமா எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலும் புதுமுக நடிகைகள், சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பட்சத்தில் அவர்களை சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குறிவைத்து அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அம்மா நடிகைகள் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் சிக்கல்களில் மாட்டி சீரழிக்கப்படுவதாகவும் தமிழ் சினிமாவில் பேசப்படுகிறது.
தமிழில் மட்டுமின்றி, மலையாள சினிமாவில் கொழுந்து விட்டு பற்றி எரிகிறது பெண்கள் எதிர்கொண்ட பாலியல் குற்றச்சாட்டுகள். இந்த பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை, சமீபத்தில் வெளியாகி பெரிய அதிர்வலைகளை மலையாள சினிமாவில் ஏற்படுத்தி வருகிறது.
சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகைகள் இதுபோன்ற அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர் என்று நீதிபதி ஹேமா கமிஷன் தந்த அறிக்கையால், கேரளா சினிமா ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர். மிக சிறந்த படைப்புகளை தந்துவரும் கேரளா சினிமா துறையில் இப்படி ஒரு களங்கமா என பலரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் சமீபத்தில் மலையாள இயக்குனர் ரஞ்சித் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். சினிமா கதை விவாதத்துக்காக தன்னை வீட்டுக்கு அழைத்தார். அப்போது வீட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
தற்போது தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னை செல்போனில் தொடர்பு கொண்ட ரியாஸ்கான், என் ஆசைக்கு இணங்கக் கூடிய உன் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து என்று கூறினார். இவ்வாறு ரேவதி சம்பத், தமிழ் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





