நடிகர் ரிச்சர்ட் ரிஷி, காதல் வைரஸ் படம் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். பழைய வண்ணாரப்பேட்டை, அந்தமான், திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். வரும் 24ம் தேதி அவர் நடித்த சில நொடிகளில் என்ற புதிய படம் ரிலீஸ் ஆகிறது.
ரிச்சர்ட் ரிஷி, நடிகை ஷாலினியின் அண்ணன். அதாவது நடிகர் அஜித்குமாரின் சொந்த மச்சினன் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், தனது சகோதரியின் கணவர் மிகப்பெரிய டாப் ஸ்டாராக இருந்தும், அவர் நடித்த படங்களில் ரிச்சர்ட் நடிக்கவில்லை. அவரது ஆதரவால் பட வாய்ப்புகளை பெறுவதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் ரிச்சர்ட் ரிஷி பெரிய அளவில் நடிகராக கொண்டாடப்படவில்லை. ரசிகர்களிடமும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற சில படங்கள் மட்டுமே அவரது பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. மற்றபடி ஒரு சராசரி நடிகராக தான் அவர் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இதற்கிடையே, அவர் சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தும், அவரும் இருக்கிற புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து 3 நாட்கள் வெளியிட்டார். இதைப் பார்த்த பலரும், இருவரும் காதலிக்கின்றனர். விரைவில் அறிவிப்பு வரும் என்றுதான் நினைத்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்த சில நொடிகளில் என்ற படத்தில் பிரமோ நிகழ்ச்சி நடந்தது. இதில் திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி பங்கேற்று பேசினார். அப்போது தனது நெருங்கிய நண்பரான ரிச்சர்ட் ரிஷி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.
அந்த புகைப்படங்கள் குறித்து பலரும் என்னிடம் கேட்டனர். அதுபற்றி ரிச்சர்ட்டிடம் நான் கேட்டபோது, வெயிட் பண்ணுங்க சொல்றேன், என கூறினார். ஆனால் அந்த சஸ்பென்ஸ் இன்று உடைந்துவிட்டது. சில நொடிகள் படத்துக்காக யாஷிகா ஆனந்துடன் எடுத்த புகைப்படங்கள்தான் அவை. புரமோவுக்காக தான் அதை முகநூலில் ரிச்சர்ட் பதிவிட்டு இருக்கிறார். நாம் எல்லாம் நினைத்தபடி வேறொன்றும் இல்லை என கூறினார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோயின் யாஷிகா ஆனந்தும் கலந்துக்கொண்டு பேசினார்.





