ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் ஆர்ஜே பாலாஜி. அதன்பிறகு படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். மூச்சு விடாமல் நான் ஸ்டாப்பாக பேசும் ஆர்ஜே பாலாஜியின் பேச்சுத் திறமை யாரையும் அவருக்கு விரைவில் பிடித்து விடுகிறது.
காமெடி ரோலில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படம் மூலம் நடிகராக மாறினார். முதல் படத்திலேயே அரசியல்வாதியாக அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அரசியல்வாதிகள் பதவிக்காக செய்யும் தில்லுமுல்லுகளை எல்லாம் காமெடி கலந்து அருமையாக சொல்லி இருந்தார்.
அதன்பிறகு மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் படங்களை இயக்கிய ஆர்ஜே பாலாஜி இப்போது நடிகர் சூர்யா நடிப்பில் அவரது 45வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். நட்டி யோகிபாபு ஷிவதா லப்பர் பந்து நடிகை சுவாசிகா மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மூக்குத்தி அம்மன். நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்த இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருந்தது. ஆர்ஜே பாலாஜி ஊர்வசி மௌலி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் போலி சாமியார் குறித்து பேசிய படமாக இருந்து ரசிகர்களை கவர்ந்தது.
மூக்குத்தி அம்மன் படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இப்போது மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை தயாரிக்கிறார். மூக்குத்தி அம்மனாக இந்த படத்தில் நயன்தாரா மீண்டும் நடிக்கும் நிலையில், இந்த 2ம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி டைரக்ட் செய்கிறார். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடிக்க என் மைண்டில் இருந்தது அனுஷ்கா அல்லது நயன்தாரா தான். என்னோட பிரண்ட் நடிகை ஸ்ருதிஹாசனிடம் இந்த கதையை போனில் சொன்னேன். கதையை கேட்டதும் ஸ்ருதிஹாசன் உடனே ஓகே சொல்லி விட்டார். ஆனால் இந்த படத்தில் நடிக்க நயன்தாராவும் சம்மதம் சொல்லிவிட்டார். ஸ்ருதி நடிக்க முடியலையே என்று எனக்கு சங்கடமாகி விட்டது. என்றாலும் இதுபற்றி நான் ஸ்ருதிஹாசனிடம் சொன்ன போது அவர் புரிந்துக்கொண்டார் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





