தமிழ் சினிமாத்துறையில் பெப்சி என்ற அமைப்பு நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அமைப்புக்கான தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த பெப்சி சங்கத் தேர்தலில் அதன் தலைவராக ஆர்கே செல்வமணி போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 5வது முறையாக இயக்குனர் ஆர்கே செல்வமணி பெப்சி அமைப்பின் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திரைத்துறை சார்ந்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி கூறியதாவது, தமிழ் சினிமா இப்போது சிரமமான சூழ்நிலையில் இருந்து வருகிறது. அதாவது சில திரைப்படங்கள் பல கோடி ரூபாய் வசூலை எட்டுவதும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடக் கூட முடியாத சூழலிலும் இருக்கின்றன.
நான் இயக்குனராக அறிமுகமாகும் போது சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய பட்ஜெட் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றி பெற்றன. ஆனால் இப்போது ஒரே படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படுவதும் பல திரைப்படங்களுக்கு திரையரங்குகளே கிடைக்காத ஒரு சூழலும் உள்ளன. இதனால் சிறிய படங்களை தயாரிப்பதும் அதில் பணிபுரிவதும் கடினமாக உள்ளது.
எனவே தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பெப்சி அமைப்பின் சார்பில் முக்கிய வேண்டுகோளை வைக்கிறோம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் இருப்பது போல தமிழ் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்று இருந்தால் ஓர் அரசின் கீழ் இயங்குகிற அமைப்பாக திரைத்துறை மாறும்.
அப்படி மாறினால் தொழிற்சாலை போன்ற ஒரு பாதுகாப்பு கட்டமைப்பும் ஏற்படும். எனவே தமிழக முதல்வர் விஜய் தமிழ் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்று அமைப்பின் மூலம் தமிழ் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என்பது எங்களது முக்கியமான வேண்டுகோள் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.





