கடந்த 5ம் தேதி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. அதற்கு முன்பாக 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா என்ற தியேட்டரில் பிரிமியர் ஷோ நடந்தது. இந்த சிறப்பு காட்சியை பார்க்க படத்தின் ஹீரோ நடிகர் அல்லு அர்ஜூனும் அங்கு வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது கூட்டத்தில் நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தார். அவரது மகனும் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஐதராபாத் போலீசார், தியேட்டர் உரிமையாளர், தியேட்டர் மேனேஜர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில், அல்லு அர்ஜூன் மீதும் ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தது, பரபரப்பபை ஏற்படுத்தியது. அதன்பிறகு நடிகர் அல்லு அர்ஜூனை, 13ம் தேதி ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். இது தெலுங்கு பட வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்த செய்த போலீசார், நாம்பல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அல்லு அர்ஜூனை 14 நாட்கள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் உடனடியாக சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அல்லு அர்ஜூன் தாக்கல் செய்த மனு, ஐதராபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் அல்லு அர்ஜூன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரிய நிலையில், நீதிபதி அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும் ஜாமீன் உத்தரவு நகல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி அல்லு அர்ஜுனை விடுவிக்க சஞ்சல்குடா சிறை அதிகாரிகள் மறுத்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதை தொடர்ந்து சனிக்கிழமை காலை அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார். தற்போது நடிகர் அல்லு அர்ஜூன் அவரது வீட்டில் உள்ள நிலையில், அவரை தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நானி உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூனின் கைது நடவடிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா கூறுகையில், நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஒரு படத்துக்கும் நடிகர்கள் தங்கள் படத்தை விளம்பரப்படுத்த தியேட்டர்களுக்கு செல்வது ஒரு தொழில் பாரம்பரியம். புஷ்பா 2 சிறப்பு காட்சிக்கு அவர் சென்றது குற்றமா? அவர் ஒரு தேசிய விருது பெற்ற நடிகர். அவரை போலீசார் நடத்திய விதம் சரியல்ல. இதை நான் கண்டிக்கிறேன் என்று ரோஜா கூறியிருக்கிறார்.





