தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இன்று பெரிய கவனத்தை பெற்றவராக மாறியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய். அவர் தனது கட்சி பெயரை அறிவித்த போது, திரைத்துறையில் மீண்டும் ஒரு காளான் போல விஜய் முளைத்துவிட்டார் என்று சில அரசியல் கட்சிகள் விமர்சித்தன.
ஆனால் விக்கிரவாண்டியில் அவர் நடத்தி அரசியல் மாநாட்டில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள் கூட்டத்தையும், விஜயின் அதிரடியான 48 நிமிட ஆவேச பேச்சையும் கேட்ட அரசியல் கட்சிகள் அப்படியே ஆடிப்போய் விட்டன. விஜயின் வருகை தமிழக அரசியல் களத்தில் பெரிய சம்பவத்தை ஏற்படுத்தும் என்பதை உணர துவங்கினர்.
நேற்று முன்தினம் பரந்தூர் சென்ற தவெக தலைவர் விஜய், அங்கு விமான நிலையம் வரக்கூடாது என்று 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் 13 கிராமங்களை சேர்ந்த மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். திமுக அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நாளுக்கு நாள் விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வெற்றி பெற்றவர் ஆர்வி உதயகுமார். இவரது இயக்கத்தில் வெளியான எஜமான் சிங்காரவேலன் சின்னக்கவுண்டர் கிழக்குவாசல் உரிமை கீதம் புதியவானம் பொன்னுமணி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். ரஜினி கமல் விஜயகாந்த் கார்த்திக் சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களை இயக்கியவர்.
சமீபத்தில் நடந்த மனிதம் படத்தின் விழாவில் கலந்துக்கொண்ட இயக்குனர் ஆர்வி உதகுமார் பேசியதாவது, விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்ததே ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய 2 படங்கள்தான். இந்த படங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் இன்று அரசியல் கட்சி ஆரம்பித்திருக்க முடியுமா, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த இந்த 2 படங்களும்தான் இன்றும் பேசப்படும் விஜய் படங்களாக உள்ளன என்று ஆர்வி உதயகுமார் கூறியிருக்கிறார்.
இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவான சிவகாசி திருப்பாச்சி என 2 படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. ஆனால் அவர் அரசியலுக்கு வருவதற்கும், இந்த படங்களுக்கும் என்ன சம்பந்தம், ஒருவேளை இந்த படங்களின் அபார வெற்றியால்தான் இன்று அரசியலுக்கு வரும் அளவுக்கு விஜய் பெரிய நடிகராகி விட்டார் என்று ஆர்வி உதயகுமார் சொல்கிறாரா, என்றும் தெரியவில்லை. இதற்கு தளபதி ரசிகர்கள்தான் சரியான பதிலை சொல்ல வேண்டும்.





