சமீபத்தில் நடந்த தேசிங்கு ராஜா 2வது பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது தமிழ் சினிமாவின் இன்றைய நிலை குறித்து, நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசினார். குறிப்பாக நடிகர்கள், இயக்குநர்கள் குறித்த தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை தர்றது இல்லை. ஒரு ஹீரோ கிடைச்சால் போதும். எப்படி வேணாலும் படம் பண்ணலாம். இப்ப இருக்கிற ஆடியன்ஸ் எல்லாம் ஹீரோவுக்காக படம் பார்க்க ஆரம்பித்து விட்டனர். கதையை பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை. ஸ்கிரீன் பிளே பத்தி கவலையில்லை. அந்த ஹீரோவுக்காக படம் ஓடீடுது. அதனால் அவர் ஒரு பெரிய டைரக்டர்.
தப்பா எடுத்துக்காதீங்க, என் மனசுல இருக்கிறதை சொல்றேன். அதே படத்தில், இன்னும் கண்டென்ட் ஓரியண்டுல, இன்னும் நல்ல திரைக்கதையோட பண்ணினால், இன்னும் பலமடங்கு அந்த படங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று சொல்ல வருகிறேன்.
சினிமாவுக்கு வர்ற இளைஞர்களுக்கு ஒரு அப்பா ஸ்தானத்துல, அண்ணன் ஸ்தானத்துல இதைச் சொல்றேன். வருகிற இளைஞர்கள் ஒரு கண்டென்டோ வாங்க. அடுத்து உங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்கிறது. அந்த காலத்துல ரைட்டர் இருந்தார். கதை ஒருத்தர் எழுதுவார். இயக்குநர் இருப்பார். இப்போது எல்லாத்தையும் நாமே பண்றோம்.
ஒரு எழுத்தாளர், ஒரு இயக்குநர் என்றால், மக்களுக்கு ஒரு நல்ல கண்டென்ட் போய் சேர வேண்டும். அந்த காலத்தில் 10 தலையை வெட்டுபவனை வில்லன் என்று சொல்லுவோம். இப்போது அதே காரியத்தை ஹீரோவை பண்ண வைக்கிறீர்கள். இது எப்படி என்று எனக்கு புரியவில்லை. இதை நாம் கொண்டாடுகிறோம். இதை எப்படி சினிமா என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். என்ன மெசேஜ் இளைஞர்களுக்கு சொல்றே? நீயும் 10 பேரை கத்தி எடுத்து வெட்டுன்னா?
இப்போ இருக்கிற இளைஞர்கள் எல்லாம் எப்படி என்றால், ஹீரோ எந்த மாதிரி சட்டை போட்டிருக்காரோ, அந்த மாதிரி சட்டை வாங்கிக்கறாங்க. படத்துல ஹீரோ வெச்சிருக்கிற அதே மாதிரி ஹேர்டைல் வெச்சிருக்காங்க. ஹீரோவை பாலோ அப் பண்றாங்க. அதனால் உங்கள் காலை தொட்டு கும்பிட்டு கேட்டுக்கறேன். நல்ல விஷயங்களை படங்களில் சொல்லுங்கள். ஏதாவது நல்ல மெசேஜ் இருக்கட்டும். 3 மணி நேர படத்துல 3 நிமிஷமாவது நல்லதை படத்தில் சொல்லுங்கள், என்று யதார்த்தமாகவும் அதே வேளையில் அழுத்தமாகவும் பேசினார் விஜய் அப்பாவும், இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர். அதே வேளையில் தொடர்ந்து வன்முறை, போதை சார்ந்த படங்களை தரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை வன்மையாக கண்டித்து, மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் எஸ்ஏ சந்திரசேகர்.





