தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பெரிய முதலீட்டில் படங்களை எடுப்பது அதிகரித்து வருகிறது. தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. தமிழில் விக்ரம், ஜெயிலர், லியோ போன்ற படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியில் பதான், ஜவான் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன.
இனி எந்த மொழியிலும் மெகா ஸ்டார்கள், சின்ன பட்ஜெட் படங்களிலேயே நடிக்க மாட்டார்களோ என ஆச்சரியப்படும் அளவுக்கு, எல்லாமே 300 கோடி ரூபாய்க்கு அதிகமாக பட்ஜெட் படங்களாக மட்டுமே இருக்கின்றன. முதலில் தமிழில் இயக்குநர் ஷங்கர் மட்டுமே இதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி, பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்றார். இப்போது, தமிழில் மட்டுமின்றி எல்லா மொழிகளிலுமே பிரமாண்ட இயக்குநர்கள் உருவாகி விட்டனர்.
இதுபோல இந்தியில், ராமாயணம் என்ற பெருங்காவியத்தை படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலே, பல நூறு கோடி ரூபாய் செலவில் எடுப்பார்கள்.அதிலும் ராமாயணம் போன்ற இதிகாசங்களை படமாக்க ஆயிரம் கோடி ரூபாய் கூட பட்ஜெட்டில் எகிற வாய்ப்புள்ளது. அதனால், இந்த படத்தை 3 பாகங்களாக எடுத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, நான்கு மாதங்கள் கழித்து, வரும் பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் ராமர் கேரக்டரில் நடிப்பவர் ரன்பீர் கபூர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், பாலிவுட் ஸ்டார்களில் மிக முக்கியமான ஒருவர். அதே போல், கேஜிஎப் படத்தில் நடித்த ஹீரோ நடிகர் யாஷ், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லட்சுமணன் அல்லது ராவணன் கேரக்டரில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தின் கதாநாயகி, அதாவது ராமரின் மனைவி சீதையாக நடிப்பது பாலிவுட்டில் பிரபலமான நடிகைகள் யாருமல்ல. அவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நடிகை. மலர் டீச்சர் ஆக நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகை சாய்பல்லவிதான் சீதையாக இந்தி படம் ராமாயணத்தில் நடிக்கிறார். அமீர்கான் மகனுடன் ஜோடியாக இந்தி படம் தற்போது நடித்து வரும் சாய்பல்லவி, இதையடுத்து ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை சாய்பல்லவி, எம்பிபிஎஸ் படித்த ஒரு டாக்டர். கோவையில், பிரமாண்டமாக ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார். மலையாளத்தில், பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழில் மாரி 2, என்ஜிகே, கஸ்தூரி மான், தாம்தூம், தியா, பாவ கதைகள், கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் நிறுவனம் தயாரிக்கும் எஸ்கே 21 படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் சாய்பல்லவி நடிக்கிறார்.





