நடிகர் சூரி முதலில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சூரி 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் நடித்துதான் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் அவரது காமெடி நடிப்பும் வசன உச்சரிப்பும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிலையில் முன்னணி காமெடி நடிகராக முன்னேற்றம் கண்டார்.
தொடர்ந்து ரஜினி விஜய் அஜீத்குமார் ரவிமோகன் சூர்யா சிவகார்த்திகேயன் விஷால் விஜய் சேதுபதி என முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்த சூரியை இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாற்றினார். கருடன் கொட்டுக்காளி மாமன் படங்களில் நடித்த சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. படப்பிடிப்பு நடந்து வரும்போதே இந்த படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜூம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மகிமா நம்பியாருக்கு நல்ல வலுவான கேரக்டர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. முதலில் மண்டாடி படத்தில் நடிக்க இருந்தது நடிகை சாய்பல்லவிதான். அவரிடம் மண்டாடி படத்தின் ஸ்கிரிப்ட்டை அனுப்பியுள்ளனர். ஸ்கிரிப்ட்டை படித்த சாய்பல்லவி மண்டாடி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால் ஹீரோ சூரி என்றவுடன் இந்த படத்தில் நான் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.
நடிகர் சூரி காமெடி நடிகராக இருந்து ஹீரோ ஆனவர். நான் இந்தியில் இராமாயணம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் சீதை கேரக்டரில் நடிக்கிறேன். சூரிக்கு ஜோடியாக நடித்தால் என் இமேஜ் என்னவாவது என்கிற ரீதியில் இந்த படத்தில் சாய்பல்லவி நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமரன் படத்தில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம்தான் தமிழ் சினிமாவில் அவரை நட்சத்திர நாயகியாக மாற்றியது. சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் காமெடி ஷோ செய்துக்கொண்டிருந்தவர் என்பதை அவரே இப்போதும் வெளிப்படையாக கம்பீரமாக சொல்லி வருகிறார். சூரி இப்போது பல இயக்குனர்கள் தயாரிப்பாளர் நாடிச் செல்லும் முக்கிய நடிகராக மாறிவரும் நிலையில் சாய்பல்லவியின் இந்த செயல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





