விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 9 ஆண்டுகளாக நடந்த நிலையில் நேற்று முன்தினம் 6ம் தேதி தமிழ் பிக்பாஸ் சீசன் 10 துவங்கியுள்ளது. இதில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த முறையும் நடிகர் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
வழக்கமாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சென்ற பிறகு ஒரு வாரம் கழித்து தான் எலிமினேட் செய்யப்பட்டு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். ஆனால் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கே 3 பேரில் ஒருவர் மேடையிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மொழிகளில் தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் மொத்த சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.
இந்தியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், தொகுப்பாளர் நட்சத்திர நடிகர் சல்மான்கான் 200 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். தமிழில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் சேதுபதி 75 கோடி முதல் 80 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார். அதே போல் மலையாளத்தில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர் நடிகர் மோகன்லால் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
அதேபோல் பெங்காலியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதே போல் தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சம்பளமாக 35 கோடி பெறுகிறார். அதேபோல் கன்னடத்தில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கிச்சா சுதீப் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று தெரியவந்துள்ளது.
இதில் மிக அதிகபட்சமாக நடிகர் சல்மான் கான் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரூ. 200 கோடியும் குறைந்தபட்சமாக கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகர் கிச்சா சுதீப் ரூ. 20 கோடியும் சம்பளம் பெறுவதாக தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக நடத்திய நடிகர் கமல்ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பாதியாக தான் நடிகர் விஜய் சேதுபதி வாங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.





