தமிழ் சினிமாவில் நடிகை திரிஷாவுக்கு என தனியாக ரசிகர் பட்டாளம் உண்டு. அதனால் 20 ஆண்டுகளாகியும் இன்னும் திரிஷா கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழில் முன்னணி ஹீரோக்கள் பலருடன் அவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. அதனால் திரிஷா இமேஜ் இப்போதும் உச்சத்தில் இருக்கிறது.
இடையில் சில படங்கள் தொய்வை தந்த போதும், 96 படத்தில் ஜானகி கேரக்டர் மீண்டும் ஒரு கம்பேக்கை திரிஷாவுக்கு கொடுத்தது. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் திரிஷா நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. சமீபத்தில் லியோ படத்தில் விஜய்க்கு உதட்டு முத்தம் கொடுத்து ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்தவர் திரிஷா.
இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நுழைகிறார் திரிஷா. கடந்த 2010ல், இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய கட்டா மேத்தி என்ற இந்தி படத்தில் திரிஷா, அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடித்தார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பிரியதர்ஷனுக்காக இந்த படத்தில் நடித்த அவர் பிறகு, இந்தி படங்களில் நடிக்கவில்லை.
ஆனால் திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் முதல், 2வது பாகங்கள் மற்றும் லியோ ஆகிய படங்கள் இந்தி வெர்சனில் வெளியாகின. இந்த படங்கள் பாலிவுட் வட்டாரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இப்போது மீண்டும் இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு 13 ஆண்டுகளுக்கு பின் திரிஷாவை தேடி வந்துள்ளது.
தமிழில் அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல், ஆரம்பம், யட்சன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்த்தன். இவர் இந்தியில் இயக்கியெ படம் ஷெர்ஷா. கார்கில் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கும் பிரமாண்டமான அதிரடி ஆக்சன் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில்தான் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்க திரிஷா கமிட் ஆகியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு, வரும் ஆங்கில புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட்டு, 2025ம் ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.





