தமிழ் சினிமாவில் பெயர், புகழ், பணம் உள்ளிட்டவைகளை மட்டுமே குறிவைக்கும் பல கலைஞர்கள் இருக்கின்றனர். அதில் இயக்குனர்களும் இருக்கின்றனர். அவர்களின் குறிக்கோள், சமுதாயத்துக்கு தேவையான, விழிப்புணர்வு மிகுந்த நல்ல படைப்புகளை தருவது முக்கியமல்ல, நூற்றுக்கணக்கான கோடிகளில் படம் லாபம் சம்பாதித்து தருவது என்பது மட்டும்தான்.
ஆனால் இதில் மாறுபட்ட நல்ல படைப்பாளிகளும் இருக்கின்றனர். அதில் மிக முக்கியமான ஒரு இயக்குனராக பார்க்கப்படுபவர் சமுத்திரக்கனி. துவக்கத்தில் கே பாலசந்தரிடம் பணிசெய்தவர், பிறகு, ரமணி வெர்சஸ் ரமணி டிவி தொடரில் சில காட்சிகளில் மிக இளைஞராக வந்திருக்கிறார். அமீர், சசிக்குமாருடன் இணைந்து பணியாற்றியவர்.
சுப்ரமணியபுரம் என்ற படத்தை சசிக்குமார் இயக்கிய போது அதில் வில்லனாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் நடிகராக அறிமுகமானார். பிறகு நாடோடிகள் என்ற படத்தை டைரக்ட் செய்து, இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். பிறகு இயக்குனர், நடிகர் என்ற இரண்டு நிலைகளிலும் தனது திரைப்பட பயணத்தை தொடர்ந்து வருகிறார் சமுத்திரக்கனி.
கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என எந்தவிதமான கேரக்டரையும் ஏற்று சிறப்பாக நடித்து வரும் சமுத்திரக்கனி, சமீபமாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் சமுத்திரக்கனிக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் வருகிறது. இந்தியன் 2 படத்திலும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்தியன் 2 பிரமோ நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்ற சமுத்திரக்கனி கூறுகையில், இந்தியன் 2 படத்தில் நானும், சித்தார்த்தும் அப்பா, மகனாக நடித்துள்ளோம். இப்படி நான் அப்பாவாக, சித்தார்த் மகனாக நடிப்பது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது. நானும் அவரும் கட்டிப்பிடித்து உணர்வுபூர்வமாக காட்சிகளில் நடித்த போது என் உடல் சூடு அவருக்கும், அவரது உடல் சூடு எனக்கும் தெரிந்தது என்று கூறியிருக்கிறார் சமுத்திரக்கனி.
28 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் படத்தில் துணை நடிகராக நடிக்கும் ஆசையில் சென்ற சமுத்திரக்கனியை, ஆடிஷனில் வேண்டாம் என திருப்பி அனுப்பிய நிலையில், இந்தியன் 2 படத்தில் அவருக்கென பிரதான கேரக்டர் தரப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தில் சமுத்திரக்கனியின் கேரக்டரில் நிறைய டிவிஸ்ட் இருக்கும் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி சித்தாார்த்துக்கு அப்பாவாக, ஒரு நேர்மையான அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





