இயக்குனர் இமயம் கே பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் சமுத்திரக்கனி. இதன் பிறகு சின்னத்திரைக்கு சென்ற அவர் அங்கு ஏராளமான தொடர்களை இயக்க ஆரம்பித்தார். குறிப்பாக சித்தி சீரியல் பணிபுரிந்த சமுத்திரக்கனி, ராதிகா நடிப்பில் செல்வி, அரசி உள்ளிட்ட நெடுந்தொடர்களையும் எடுத்தார்.
பிறகு அங்கிருந்து மீண்டும் வெள்ளி திரைக்குச் சென்ற அவர், இயக்கத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2003 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் அது சரியாக போகவில்லை.
இதன் பின்னர் சமுத்திரக்கனிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது சுப்பிரமணியபுரம் திரைப்படம். சசிகுமார் இயக்கத்தில் இன்றுவரை கொண்டாடப்படும் அந்த திரைப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார் சமுத்திரக்கனி. இதன் பிறகு அவரது இயக்கத்தில், நாடோடிகள் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதன் பிறகு இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டு பக்கத்திலும் சிக்ஸர் அடித்து வந்தார் சமுத்திரக்கனி. துணை நடிகர், குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் சமுத்திரக்கனியை விட்டால் ஆளில்லை என்ற நிலை உருவானது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளத்திலும் தனது கடையை விரிவு படுத்தினார் சமுத்திரக்கனி.
இதன் நடுவே அப்பா, வினோதய சித்தம் உள்ளிட்ட திரைப்படங்களையும் அவர் இயக்கினார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சமுத்திரக்கனி பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் தலித் மட்டுமல்ல எல்லா மூவ்மெண்ட்டும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான இயக்குனர்கள் தங்கள் ஜாதியை காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்னைப் போன்ற இயக்குனர்கள் தான் இங்கு அனைவரும் ஒன்று ஒன்று என்று கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில் சில இயக்குனர்கள் அப்படி இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு இயக்குனர் எந்த சாதியோ அந்த சாதியை சேர்ந்த கேமரா மேன்னைதான் வைத்திருக்கிறார். கலை இயக்குனரை தான் வைத்திருக்கிறார். அவர்களால் முடியவே முடியவில்லை என்றால் தான் வெளியில் இருந்து ஆளை எடுப்பார்கள். தெலுங்கு சினிமாவிலும் இது நடக்கிறது. ஆனால் மலையாளத்தில் நான் இதை பார்த்ததில்லை என்று பேசி இருக்கிறார். சமுத்திரக்கனியின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது. சினிமாவில் யாரும் பேசாததை, சமுத்திரக்கனி போட்டு உடைத்திருப்பதாக அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.





