நடிகர் வடிவேலு, வைகைப்புயல் என அழைக்கப்பட்டவர் சமீபகாலமாக சர்ச்சை நாயகனாக மாறிவிட்டார். அவரை பற்றி பேசினாலே கடுமையான விமர்சனங்களும், அவர் மீதான சர்ச்சைகளுமே அதிகரித்து வருகின்றன. குறிப்பாக திமுக ஆதரவாளராக அவர் மாறியதில் இருந்தே இந்த பிரச்னை துவங்கி விட்டது.
திமுக ஆதரவாளராக தேர்தல் பிரசார மேடைகளில் பேசிய வடிவேலு, அதிமுக குறித்து அதிகம் விமர்சித்து பேசாமல், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து அதிகமாக விமர்சித்தார். எந்த கப்பலுக்கு இவர் கேப்டன், தண்ணீல மிதக்கிற கப்பலுக்காக என கிண்டலடித்தார்.
விஜயகாந்த் குறித்து வடிவேலு தரக்குறைவாக பல இடங்களில் பேசிய போதும், வடிவேலு குறித்து விஜயகாந்த் எந்த இடத்திலும் விமர்சித்து பேசியது இல்லை. அவரை பற்றி குறை சொன்னதும் இல்லை. அவர் நினைத்திருந்தால், வடிவேலுவுக்கு நடிக்க யாருமே வாய்ப்பு தராதீர்கள் என்று கூட தயாரிப்பாளர்களுக்கு சொல்லி இருக்கலாம்.
ஏனெனில் அந்த அளவுக்கு ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் பெரிய ஸ்டாராக டாப்பில் இருந்தவர்தான் விஜயகாந்த். ரஜினி, கமல் கூட விஜயகாந்த் சொன்னால், கேட்டுக்கொள்ளும் நிலையில்தான் இருந்தார்கள். ஏனெனில் விஜயகாந்த் மீது அவர்கள் இருவருக்கும் எப்போதுமே தனி மரியாதை உண்டு. விஜி விஜி என்றுதான் கேப்டனை ரஜினி, கமல் அழைப்பது வழக்கம்.
அப்படி ஒரு பெரிய நிலையில் இருந்தும் விஜயகாந்த், வடிவேலுவை ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை. இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு நேரில் வரவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையாக சமீபத்தில் வெடித்து கடுமையாக வடிவேலு விமர்சிக்கப்படுகிறார்.
இதுகுறித்து விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வரவில்லையே, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். அதற்கு நான் இப்படித்தான் சொன்னேன், வடிவேலு வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்தை நினைத்து அழுதிருக்கலாம். மனித இயல்பு அதுதான். வரமுடியவில்லையே என்றுதான் நினைத்திருப்பார். வந்தால் வேறு ஏதாவது சொல்வார்களா, திட்டுவார்களா என்றும் கூட அடர் நினைத்திருக்கலாம். ஆனால் மறப்போம், மன்னிப்போம் என்ற மனம் படைத்த விஜயகாந்த், இதை எல்லாம் பெரியதாக எடுத்திருக்க மாட்டார். அதனால்தான் வடிவேலு நிச்சயம் அழுதிருப்பார் என்று நான் சொன்னேன், என்று வடிவேலு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சரத்குமார் பேசியிருக்கிறார்.





