நடிகர் சத்யராஜ், தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த ஒரு கலைஞனாக வலம் வந்துக் கொண்டு இருப்பவர். துவக்கத்தில் வில்லனாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற சத்யராஜ், பிறகு கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரது பல படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்தன.
குறிப்பாக சத்யராஜ் நடித்த அமைதிப்படை, திருமதி பழனிசாமி, நடிகன், வாத்தியார் வீட்டுப்பிள்ளை, ரிக்ஷா மாமா, பிரம்மா, தெற்கு தெரு மச்சான், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ஜல்லிக்கட்டு, தாய்மாமன் போன்ற பல படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சத்யராஜ் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். படத்தில் ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார். குறிப்பாக நயன்தாரா அப்பா கேரக்டரில் சத்யராஜ்தான் அதிகமாக நடிக்கிறார். வயதான தந்தை கேரக்டரில் அவரது நடிப்பு அருமையாக இருக்கிறது.
இதற்கிடையே பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா வேடம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தமிழில் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் சத்யராஜூக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், சத்யராஜ் இப்போது பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதாக பரவிய தகவலால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
ஏனெனில் பாஜக ஆட்சி, கொள்கைகள் குறித்து மாற்றுக் கருத்து உடையவர் சத்யராஜ். கடவுள் மறுப்பாளரான அவர், பிரதமர் மோடி கேரக்டரில் நடிக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் சத்யராஜ் தரப்பில் இதுகுறித்து விசாரித்தல் அப்படி எல்லாம் இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
ஆனால் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் மோடி கேரக்டரில் எனது தந்தை சத்யராஜ் நடிக்கிறார் என்ற தகவலை, மிக முக்கியமான பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகனுக்கு முதலில் கூறியதே சத்யராஜ் மகள் திவ்யா தான் என்றும் விவரம் வெளியாகி உள்ளது. மகள் கூறும் விஷயத்தை தந்தை தரப்பு மறுக்கிறது. இதில் எது உண்மை என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என தமிழ் சினிமா வட்டாரம் பரபரப்பாக காத்திருக்கிறது.





