தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் புதுமுக இயக்குனர்களுக்கு அவர்களது படங்களை இயக்க வாய்ப்பு தர மாட்டார்கள். ஆனால் அவர்களே மற்ற ஹீரோக்களை வைத்து ஓரிரு படங்கள் ஹிட் கொடுத்து விட்டால் அவர்களை, இவர்களே வலிய போய் அழைத்து எனக்கு ஒரு கதை பண்ணுங்கள் என்று சொல்வார்கள். இது நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது.
அதிலும் நடிகர்கள் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் தனுஷ் போன்றவர்கள் தங்களது இயக்குனர்களை இப்படிதான் தேர்வு செய்கிறார்கள். ஹிட் படம் கொடுத்த இயக்குனர்களை மட்டுமே தனது படங்களை இயக்க வைத்து அந்த படத்தின் வெற்றியின் வெளிச்சம் தங்களது படத்துக்கும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.
ஆனால் கேப்டன் விஜயகாந்த் அப்படியல்ல. நடிக்க வந்த புதிதில் நானும் புதுமுகம்தான். அறிமுகம்தான். ஆனாலும் என்னை நம்பி இயக்குனர், தயாரிப்பாளர் படம் எடுத்ததால்தான் இன்று நான் நடிகன் என்று சொல்லி பல புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்தார். அதில் பலர் பெரிய அளவில் ஜெயித்தவர்கள்தான். அதற்கு முக்கிய உதாரணம் இயக்குனர் ஆர்கே செல்வமணி.
திரைப்பட கல்லூரியில் படித்த ஆர்கே செல்வமணி இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர். ஒரு முறை, அவர் தனியாக படம் எடுக்க விரும்பிய நிலையில் சத்யராஜிடம் கால்ஷீட் வாங்கி தரும்படி மணிவண்ணனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு மணிவண்ணன், எனக்கு வேண்டுமானால் நான் சத்யராஜிடம் கால்ஷீட் கேட்கலாம். அடுத்தவர்களுக்கு நான் கேட்டால் அது சரியாக வராது. நீயே போய் கேட்டுக்கொள் என்று கூறியிருக்கிறார்.
அதன்பிறகு சத்யராஜை அவரது வீட்டில் சென்று சந்தித்த ஆர்கே செல்வமணி தனது படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார். நான் புதுமுக இயக்குனர்கள் படத்தில் நடிப்பதில்லை. நீங்கள் ஒரு வெற்றிப்படம் கொடுங்கள். அப்புறம் நடிக்கிறேன் என்று கறாராக கூறிவிட்டார். இது செல்வமணிக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த்திடம் கதை சொல்லி அவரது படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அந்த படம்தான் புலன் விசாரணை. நடிகர் சத்யராஜ் நடிக்குமாறு ஆர்கே செல்வமணி சொன்ன கதை தாவ் புலன் விசாரணை. அதன்பிறகு சத்யராஜை வைத்து ஒரு படம் கூட ஆர்கே செல்வமணி இயக்கவில்லை. ஆனால் சத்யராஜ் ஒருகாலகட்டத்தில் மார்க்கெட் இழந்த நிலையில் பல புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





