வளைகுடா நாடுகளில் போர் காரணமாக நாடு முழுவதும் வாகனங்களுக்கான பெட்ரோல் டீசல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் பயணங்களை குறைத்துக்கொள்ளுங்கள். முடிந்த வரை ஹோம் ஒர்க் செய்யுங்கள். பேட்டரி கார்களை பயன்படுத்துங்கள். கார்கள், டூவீலர்கள் பயன்பாட்டை குறைத்து பஸ்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யுங்கள் என்று பாரத பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன்பு மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் அல்லு அர்ஜூன் போன்றவர்கள் இனி படப்பிடிப்புகளுக்கு பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தனி விமானங்களை பயன்படுத்துவதில்லை. பயணிகள் பயணிக்கும் பொது விமானத்தையே பயன்படுத்தி செலவை குறைக்க போவதாகவும் கூறினர். அதேபோல் அவர்கள் பயணிகளின் விமானத்தில் பயணிக்கவும் துவங்கிவிட்டனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் அவர் நடித்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இரண்டரை மணி நேர பயண தூரத்தில் இருந்த படப்பிடிப்பு தளத்திற்கு வாடகை காரை போல தினமும் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வந்து சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் நடன இயக்குனராக இருந்து பிறகு திரைப்பட இயக்குனராக மாறியவர் பராகான். நடிகர் அக்சய் குமார் நடித்த தீஸ் மார் கான் என்ற படத்தை அவர் டைரக்ட் செய்தார்.
இந்த படம் கடந்த 2010ம் ஆண்டில் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் பராகான் நடிகர் அக்சய் குமார் இயக்குனர் பிரியதர்ஷன் உள்ளிட்டோர் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குனர் பராக்கான், மும்பையில் இருந்து இரண்டரை மணி நேரம் பயணிக்கும் தொலைவில் உள்ள இடத்தில் தீஸ் மார் கான் படப்பிடிப்பு நடந்தது. அதனால் படக்குழுவினர் அனைவரும் அங்கேயே தங்கி விட்டோம்.
ஆனால் ஹீரோ அக்சய் குமார் மட்டும் வீட்டிலிருந்து வாடகை காரை பயன்படுத்துவது போல தினமும் ஹெலிகாப்டரில் ஷூட்டிங்குக்கு வந்து சென்றார். இதன் மூலம் என் காசையெல்லாம் அவரே தின்று விட்டார் என்று ஜாலியாக குறிப்பிட்டார். அப்போது பேசிய நடிகர் அக்சய் குமார், என்னது? உங்கள் காசா? அந்த படத்திற்கு நானும்தான் தயாரிப்பாளர் என்பதை மறந்து விட்டீர்களா என்று பதிலுக்கு கிண்டல் செய்தார்.
நடிகர்கள் வழக்கமாக விமானத்தில் பயணித்து படப்பிடிப்பு நடக்கும் ஊருக்கு தான் செல்வார்கள். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கே தினமும் ஹெலிகாப்டரில் அக்சய்குமார் வந்து சென்றிருக்கிறார். ஆனால் 16 ஆண்டுகளுக்கு முன்பு 2010ம் ஆண்டில் தான் இது நடந்துள்ளது. அதுவே இப்போது என்றால் எந்த தயாரிப்பாளருக்கும் பட்ஜெட் தாங்காது என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர். நடிகர் அக்சய் குமார், இயக்குனர் ஷங்கர் இயக்கிய ரோபோ 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக பக்ஷி ராஜா கேரக்டரில் நடித்து மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





