தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாகவும் பிறகு கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தவர் சத்யராஜ். பகுத்தறிவு சிந்தனையாளர். பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர். ஆனால் சினிமாவிலும் சொந்த வாழ்க்கையிலும் அவர் உண்மையான பகுத்தறிவுவாதி இல்லை என்று அவரை பலரும் கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் எம்ஜிஆர் ரசிகராக தன்னை காட்டிக்கொண்ட சத்யராஜ் பிறகு திமுகவின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். இப்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக சத்யராஜ் நடித்து வருகிறார். சத்யராஜூக்கு சிபிராஜ் என்ற மகன் இருக்கிறார். அவரும் நடிகர்தான். பல படங்களில் நடித்திருக்கிறார்.
சத்யராஜூக்கு திவ்யா என்ற மகள் இருக்கிறார். ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுக வில் இணைந்தார். அவருக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கொளப்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் திவ்யா சத்யராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு சொகுசு விமானத்தில் பிரண்டு கூட பிரண்டு திருமணத்துக்கு போகும் ஒரு போலி அரசியல்வாதி கிடையாது.
அவர் ஒரு கடின உழைப்பாளி. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடமிருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன்தான் உதயநிதி அவரை எதிர்த்து யார் நின்றாலும் டெபாசிட் போய்விடும். அவர் ஒரு வீழ்த்த முடியாத ஹீரோ.
நான் கல்லூரியில் படிக்கும்போது ஆசிரியர், எல்லோரிடமும் நீங்க யாருடைய ரசிகை எனக் கேட்டார். சிலர் மைக்கேல் ஜாக்சன் ரசிகை, அமீர்கான் ரசிகை என்று கூறினார்கள். ஆனால் நான் அப்போது கருணாநிதியின் ரசிகை என்று பெருமையாக சொன்னேன் என்று பேசியிருக்கிறார். நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் விமானத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு கோவா சென்றதை சத்யராஜ் மகள் திவ்யா விமர்சித்து பேசியிருப்பது, விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.





