சமீப காலமாக அரசியல் பேசும் எந்த ஒரு youtube சேனலை எடுத்தாலும் அதில் சவுக்கு சங்கர் என்ற பெயர் இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர் சவுக்கு சங்கர். இவர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட போது கூட இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பெருமளவில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. பல கட்சிகளையும் தொடர்ந்து விமர்சித்து வரும் சவுக்கு சங்கர் குறித்த ஒரு பயோ பிக் உருவாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சவுக்கு சங்கரின் பயோபிக்கே சுவாரசியம் என்றால் அதை எடுக்கப்போகும் இயக்குனர் பெயரை கேட்டால் இன்னும் சுவாரஸ்யம் அதிகம் ஆகும். அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லம், வெற்றிமாறன் தான். கடினமான முயற்சியின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று தொடர்ச்சியாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது விடுதலை பாகம் 2 படத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் இருந்து வருகிறார்.
விடுதலை படத்தை தொடர்ந்து அவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் எல்லாம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து வடசென்னை பாகம் 2 படத்தையும் இயக்க உள்ளார். அதோடு விஜய்யை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக படங்களை கையில் வைத்துள்ள வெற்றிமாறன், சவுக்கு சங்கரின் வாழ்க்கையை படமாக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் தனுஷ் தான் ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல சவுக்கு சங்கர் பயோபிக் படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடிப்பார் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது.
தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய சவுக்கு சங்கர், சில குற்றங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் ஒரு இணையதளத்தை நடத்தி வந்தார். அதன் பிறகு தான் youtube பக்கம் வந்துள்ளார். இப்படி அவரின் வாழ்க்கையில் நடந்த பல விடயங்களும் சுவாரஸ்யமாக உள்ளதால் சவுக்கு சங்கர் குறித்த படம் வந்தால் அது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.





