தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது அவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி, தனது முதல் அரசியல் மாநாட்டை கடந்த வாரம் ஞாயிறு அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் நடத்தினார். இந்த மாநாடு மிகப் பிரமாண்டமாக நடந்தது.
இந்த மாநாட்டுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து விஜய்க்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் கொள்கை கோட்பாடுகள் குறித்தும் தெளிவாக விளக்கிப் பேசினார். அதே நேரத்தில் தனது அரசியல் எதிரி தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக தான் என்றும் மிக பகிரங்கமாக அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற டிசம்பர் 27ம் தேதி கோவையில் மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்கும் நடிகர் விஜய், மாவட்டம் வாரியாக சென்று மக்களை நேரில் சந்தித்து தனக்கான ஆதரவை திரட்ட உள்ளார். இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய்க்கு எதிராக நாம் தமிழர் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவது தமிழக மக்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய போது, தம்பி வரட்டும் அவருக்கும் அரசியலுக்கு வர ஜனநாயக உரிமை உள்ளது. அவரும் மக்களை சந்தித்து தனக்கான ஆதரவை திரட்டட்டும் என்று கூறிய சீமான், இப்போது மாநாடு முடிந்த பிறகு விஜய் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை கூறத் தொடங்கியிருக்கிறார்.
குறிப்பாக மக்கள் கூட்டம் திரண்டு வந்துவிட்டால் அதெல்லாம் ஓட்டுகளாக மாறிவிடும் என்று சொல்லிவிட முடியாது. எனக்கு இதுவரையும் 36 லட்சம் பேர் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். அப்படி என்றால் மாநாடு நடத்தினால் அத்தனை கூட்டம் வருமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் இவர்களைப் பற்றி எல்லாம் விஜய்க்கு யார் என்றே தெரியாது. நாங்கள் வேலுநாச்சியாரை பற்றியும், அஞ்சலை அம்மாள் பற்றியும் கூட்டங்களில் பேசிய பிறகுதான் அவர்களை தங்களது கொள்கை தலைவர்களாக விஜய் வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
அத்துடன், நான் குட்டிக்கதை சொல்ல வரவில்லை தம்பி, நான் நடந்த வரலாறுகளை மக்கள் மத்தியில் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பிஎச்டி வாங்கியவர்கள் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். துவக்கத்தில் விஜய் வருகையை வரவேற்ற சீமான், இப்போது மாநாட்டில் விஜய்க்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை கண்டு, அவருக்கு எதிராக தனது பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். விஜய் திமுகவை எதிர்க்கிற நிலையில், இப்போது விஜய் எதிர்க்கும் நிலைக்கு சீமான் தள்ளப்பட்டு இருப்பதற்கான அரசியல் காரணம் என்னவென்று தெரியவில்லை என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்





