எப்போதுமே ஒரு வேலையை ஒருவர் சிறப்பாக செய்யும்போது, அவருக்கு பதிலாக வேறொருவர் அந்த பணியை செய்தால் அவர் அந்த வேலையை சிறப்பாக செய்கிறாரா, இல்லையா என்பது குறித்த கவனமும் விமர்சனமும், ஒப்பீடும் எழுவது வாடிக்கை. ஒரு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தால், அந்த படத்தின் 2ம் பாகம் வரும்போது முதல் படத்தில் நடித்த ஹீரோவுக்கு பதிலாக வேறொரு ஹீரோ நடிக்கும் பட்சத்தில் அந்த படமும் ஒப்பீட்டில் சிக்கி விடுகிறது.
இயக்குனர் பி வாசு இயக்கிய சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் சந்திரமுகி 2ம் பாகத்தை பி வாசு எடுத்தபோது படத்தில் ஹீரோவாக ரஜினி நடிக்காமல், ராகவா லாரன்ஸ் நடித்தார். படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
அதேபோல் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் சினிமா நடிகர் மாரிமுத்து முக்கியமான கேரக்டரில் நடித்தார். ஆனால் திடீரென மாரிமுத்து மறைந்ததால், அந்த கேரக்டரில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்தார். ஆனால் மாரிமுத்து அளவுக்கு அவரது நடிப்பு எடுபடவில்லை. வேல ராமமூர்த்தியும் சிறந்த நடிகர் தான் என்றாலும் கூட, மாரிமுத்துவுடன் ஒப்பிடும்போது ரசிகர்களுக்கு வேல ராமமூர்த்தி நடிப்பு அவ்வளவாக திருப்தி தரவில்லை.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக, இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நாளான நேற்று அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். விஜய் சேதுபதி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குவாரா, போட்டியாளர்களை எப்படி எதிர்கொண்டு பேசுவார், அவர்கள் செய்யும் பிரச்னைகளை, பஞ்சாயத்துகளை எப்படி சமாளிப்பார் என்று பார்வையாளர்கள் மத்தியில் பொதுவாக ஒரு எதிர்பார்ப்பும் சந்தேகமும், குழப்பமும் இருந்தது.
ஆனால் நேற்று முதல் நாள் நிகழ்ச்சியை பார்த்த பலரும், விஜய் சேதுபதியை பாராட்டி வருகின்றனர். போட்டியாளர்களை சந்தித்து அறிமுகபடுத்தும் அந்த துவக்க நிகழ்ச்சியிலேயே விஜய் சேதுபதி சிறப்பாகவும், யதார்த்தமாகவும் பேசினார் என்று பலரும் தெரிவிக்கின்றனர். கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது, எப்போதுமே அவரிடம் ஒரு தற்பெருமை இருக்கும். ஆனால் விஜய் சேதுபதியிடம் அதை காண முடியவில்லை என்றும் பலர் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர்.
எனினும் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள், கமல் அளவுக்கு விஜய் சேதுபதி இல்லை. கமல் ஸ்டைலே தனிதான் என்று புகழ்கின்றனர். தற்போது ஒரு நாள் மட்டுமே கடந்துள்ள நிலையில், இன்னும் 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி கொண்டு செல்ல வேண்டும். இதில் வார இறுதி நாட்கள் சனி, ஞாயிறு தினங்களில் அவர் நேரடியாக வந்து வீட்டுக்குள் நடந்த பஞ்சாயத்துகளை விசாரித்து, தீர்ப்பளித்து பேச வேண்டும். அப்போதுதான் கமல் அளவுக்கு விஜய் சேதுபதி தன்னுடைய பேச்சுத்திறமையை, புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவாரா என்பது தெரியவரும்





