நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, அவரை பற்றிய புதிய புதிய தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவில், அரசியல் வாழ்க்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்த அவரது வாழ்க்கையில், அவரை சந்தித்த மனிதர்கள், அவருடன் சக மனிதராக பயணித்த மனிதர்கள் விஜயகாந்த் பற்றிய புதிய புதிய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
விஜயகாந்த் நடித்த படங்களில், தவசி படம் மிக முக்கியமான வெற்றி படமாக அமைந்தது. அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டரில் அவர் நடித்திருப்பார். இதில் அப்பா கேரக்டர் பெயர்தான் தவசி. அவரது மகன் கேரக்டரில் விஜயகாந்துக்கு சவுந்தர்யா நடித்திருப்பார். இந்த படத்தில், விஜயகாந்த், வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் இடம்பெற்றன.
துளசி வாசம் மாறினாலும், மாறும். ஆனால், இந்த தவசியோட வார்த்தை மாறாதுடா என டயலாக் பேசும் தவசி விஜயகாந்த், தனது மகனை ஒரு ஏழை வீட்டில் வேலைக்காரனாக இருக்க உத்தரவிடுவார். அவரும் அதே போல் அந்த குடும்பத்தில் வேலைக்காரனாக இருந்து அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவார்.
சமீபத்தில் விஜயகாந்த் மறைவு குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநருமான சீமான் கூறுகையில், தவசி படத்துக்கு நான்தான் வசனம் எழுதியிருந்தேன் என குறிப்பிட்டு இருந்தார், ஆனால் அந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என படத்தின் டைரக்டர் உதயசங்கர் பெயர்தான் டைட்டில் கார்டில் வரும்.
இதையடுத்து பலரும், விஜயகாந்த் மறைந்து போயுள்ள இந்த நேரத்தில், சீமான் இப்படி தவசி படத்துக்கு வசனம் எழுதியதாக பேசி, தன்னை மிகைப்படுத்திக் கொள்வதாக சமூகவலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. இந்த பெருமை சீமானுக்கு தேவையான எனவும் கமெண்ட் அடித்து வரும் நிலையில், தவசி படத்துக்கு வசனம் எழுதியது சீமான்தான் என்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து தவசி படத்தின் இயக்குநர் உதயசங்கர் கூறுகையில், தவசி படத்தில் முழு வசனங்களையும் எழுதியவர் சீமான்தான். படப்பிடிப்பில் நான் சின்ன சின்ன மாற்றங்களை மட்டுமே செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் சீமான் இயக்கிய சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. அதனால் தவசி படத்துக்கு அவர் வசனம் எழுதியது தெரிந்தால், தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காது. பலரும் வசனம் எழுத அழைத்துவிடுவர் என்பதால், வசனம் என எனது பெயர் டைட்டிலில் போட வேண்டாம் என சீமானே கேட்டுக்கொண்டார். அதனால், டைட்டில் கார்டில் சீமானுக்கு நன்றி என்று மட்டும் குறிப்பிட்டோம் என, உதயசங்கர் விளக்கமளித்துள்ளார்.





