இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பல வெற்றிப் படங்களை தந்தவர். குறிப்பாக அவர் இயக்கிய பீட்சா ஜிகர்தண்டா இறைவி மகான் மெர்குரி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பேட்ட ரெட்ரோ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இப்போது டோரதி என்ற படம் கடந்த மாதம் 25ம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற கல்யாண விருந்து என்ற பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நாயகன் ரிஷிகாந்த் மற்றும் நடிகர் சனந்த் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
டோரதி படம் திருநங்கைகள் குறித்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 2 நண்பர்களில் ஒருவர் திருநங்கையாக இறுதியில் மாறிவிடுகிறார். கடைசியில் அந்த நண்பனை தனது காதலியாக படத்தின் நாயகன் ஏற்றுக்கொள்வதே கதை. முள் மீது நடப்பது போன்ற ஒரு வித்யாசமான கதைக்களத்தில் உருவான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று டோரதி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர்கள் சனந்த் ரிஷிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது டோரதி படம் குறித்தும் அதில் வரும் காட்சிகள் குறித்தும் ரஜினிகாந்த் ஒரு மணி நேரம் மனம் விட்டு பேசி படக்குழுவை பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தலைவா அற்புதம் அழகு அசத்தல். தலைவருக்கு டோரதி படம் மிகவும் பிடித்திருந்தது. படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டி ஒரு மணி நேரம் விரிவாக பேசினார். இதை விட சிறந்தது வேறு என்ன வேண்டும்?
அந்த உரையாடலையும் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் என்றென்றும் நினைவில் கொள்வேன். இந்த கார்த்திக் சுப்பராஜை தான் தேடிக்கொண்டு இருந்தேன். உங்களுக்கு என் சல்யூட் என்று சொன்னதும் மகிழ்ச்சியில் மிதக்கிறேன். உங்களை நேசிக்கிறேன் தலைவா என்று அந்த பதிவில் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





