தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்பில் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் வரவேற்பை பெற்றவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்றுதான் இவரை ரசிகர்கள் அழைப்பது வழக்கம். கடந்த 1980 – 90களில் கார்த்திக் நடித்த ஏராளமான படங்கள் வெள்ளி விழா படங்களாக இருந்தன.
நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்துடன் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகர் கார்த்திக் அறிமுகமானார். இந்த படத்தில் அவரது ஜோடியாக நடிகை ராதா அறிமுகமானார். இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுகங்கள் எல்லாருமே உச்சம் தொட்ட நட்சத்திரங்கள் என்பதால் கார்த்திக் ராதா மட்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக். அப்பா தாத்தா போலவே அழகிலும் நடிப்பிலும் தோற்றத்திலும் ஒரு அற்புதமான கலைஞராக இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தும் தனது அப்பா கார்த்திக் போல அவரால் முக்கிய இடத்தை சினிமாவில் பிடிக்க முடியவில்லை.
தனக்கான நட்சத்திர அந்தஸ்தை பெற தொடர்ந்து கௌதம் கார்த்திக் போராடி வருகிறார். இந்நிலையில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் இயக்குனர் சின்னசாமி இயக்கத்தில் செங்குளம் என்ற படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வந்தார். இந்த படத்தின் பட்ஜெட் 6 கோடி ரூபாய் என முடிவு செய்து ஷூட்டிங் துவங்கி நடந்தது.
ஆனால் படப்பிடிப்பை துவங்கிய 8 நாட்களில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகி விட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடர தயாரிப்பாளரை அணுகிய போது 8 நாட்களில் 2 கோடி ரூபாய் செலவானதால் தயாரிப்பாளர் பணம் தர மறுத்து விட்டார். எனினும் படக்குழுவின் வற்புறுத்தல் காரணமாக தயாரிப்பாளர் மீண்டும் தொகை தந்த நிலையில் சில நாட்கள் திருநெல்வேலியில் ஷூட்டிங் நடந்தது.
ஆனால் அதன்பிறகு நிதி நெருக்கடியால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை. சில மாதங்களாக செங்குளம் ஷூட்டிங் தடைபட்டு பாதியில் நின்றுள்ளது. இந்த படத்தில் ஒரு வித்யாசமான ரோலில் கெட்டப்பில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வருகிறார். இப்போது ஷூட்டிங் தொடராமல் அப்படியே நின்று தடைபட்டுள்ளதால் கௌதம் கார்த்திக் தடுமாறி வருகிறார். இந்த கெட்டப்பை செங்குளம் படம் முடியாமல் மாற்ற முடியாது என்பதால் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் நடிக்க முடியவில்லை. அதனால் அந்த படங்களில் இருந்து விலக வேண்டிய சிக்கல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.





