நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியான நிலையில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் சில வாரங்கள் ஜெயிலர் 2 படப்பிடிப்பு சென்னையில் நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் மலையாள நடிகர் மம்முட்டி கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அத்துடன் இந்த படத்தில் சந்தானமும் நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபு விடிவி கணேஷ் போன்றவர்களும் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. வருகிற மார்ச் மாதம் நடக்கும் படப்பிடிப்பில் தான் ஷாருக்கான் கலந்துக்கொள்கிறார். மொத்தம் 8 நாட்கள் அவர் கால்ஷீட் தந்திருக்கிறார். அவரும் ரஜினியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
இந்த படத்தில் மெயின் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பது நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான். அவரது அப்பாவாக மிதுன் சக்ரவர்த்தி நடித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தில் வில்லனாக வருமன் கேரக்டரில் நடித்த விநாயகன் அந்த படத்தில் கிளைமாக்ஸில் கொல்லப்படுகிறார். எனினும் ஜெயிலர் 2 படத்தில் சில பிளாஷ்பேக் காட்சிகளில் அவர் இறப்பதற்கு முந்தைய சில காட்சிகளில் வருவது போல நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கூலி படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்திருந்தார். அதில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஷாருக்கான் தான். ஆனால் லோகேஷ் கனகராஜ் சொன்ன காட்சியை கேட்டு விட்டு இந்த மாதிரி துக்கடா காட்சியில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. அதே போல் கூலி படத்தில் அமீர்கான் வந்த காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.
ஆனால் ஜெயிலர் 2 படத்தை பொருத்த வரை இந்தி நடிகர் ஷாருக்கான் வரும் காட்சிகள் பவர்ஃபுல் காட்சிகளாக தான் இருக்கும். 8 நாட்கள் வரை அவர் கால்ஷீட் தந்திருப்பதால் படத்தின் பல காட்சிகளில் அவர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ரஜினியுடன் ஷாருக்கான் இணையும் இந்த படம் ஜெயிலர் படத்தை விட ஜெயிலர் 2 பெரிய லெவலில் சம்பவம் செய்யும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.





