போதிய பட வாய்ப்பு இல்லாத வரை, இயக்குனர்களின் சொல்படி கேட்டு நடந்துக்கொள்ளும் சில ஹீரோக்கள், தொடர்ந்து சில படங்கள் ஹிட் கொடுத்து விட்டால், நான் சொல்கிறபடி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாறிவிடுகிறார்கள். அப்படி சில ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பிறமொழி சினிமாவிலும் இருக்கவே செய்கின்றனர்.
நடிகர் அனுராக் காஷ்யப், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும், வரவேற்பையும் பெற்றவர். லியோ படத்திலும் ஒரு காட்சியில் வருவார். அவர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றை அனுராக் காஷ்யப் இயக்குவதாகவும் தகவல் உள்ளது.
சமீபத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிக்கரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் மகாராஜா படத்தில், பிரதான வில்லன் கேரக்டரில் அனுராக் காஷ்யப் நடித்திருக்கிறார். இந்தி நடிகரை போல இல்லாமல், மிக இயல்பான தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ஒரு நல்ல வில்லன் நடிகர் கிடைத்திருக்கிறார்.
இந்தியில் பல படங்களை தயாரித்துள்ள, இயக்குனராக பணிசெய்துள்ள நடிகர் அனுராக் காஷ்யப், சமீபத்தில் ஒரு நேர்காணலில் சில ஹீரோக்கள் செய்யும் அட்ராசிட்டி குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, ஒரு முன்னணி ஹீரோ படப்பிடிப்புக்கு வந்தால், அவருக்காக ஒரு ஸ்பெஷல் செஃப் சமையல் செய்ய வரவேண்டும். அந்த ஹீரோ படப்பிடிப்பு செட்டில் தயார் செய்யப்படும் உணவை சாப்பிட மாட்டார்.
அந்த ஸ்பெஷல் செஃப் தயார் செய்து தரும் உணவை மட்டுமே சாப்பிடுவார். அந்த செஃப்புக்கு ஒருநாள் சம்பளம் ரூ. 2 லட்சம் ரூபாய். இப்படி எல்லாம் செய்துதான் படத்தின் பட்ஜெட்டை மிக அதிகமாக்கி விடுகின்றனர். அந்த செஃப் சமைப்பது, குருவிகளுக்கு கொடுக்கும் உணவு போல, மிகவும் கொஞ்சமாக தான் இருக்கும். கேட்டால், அந்த உணவு ஹீரோவுக்கு மட்டும்தான். அவர் மட்டுமே சாப்பிட வேண்டும். டாக்டர் அட்வைஸ்படி அவர் சாப்பிடுகிறார் என்பார்கள்.
ஆனால் என்னுடைய படப்பிடிப்பு செட்டில் இதுபோன்ற அட்ராசிட்டி எல்லாம் நடக்க நான் விடமாட்டேன். படப்பிடிப்பு தளத்தில் எல்லா விஷயங்களுமே அனைவருக்கும் பொதுவானதாக தான் இருக்கும். ஹீரோ, வில்லன், காமெடியன் என்ற பாகுபாடு எல்லாம் எதுவும் கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருமே நடிகர்கள்தான், பணியாளர்கள்தான். பணி செய்ய வந்தவர்கள்தான், என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் அனுராக் காஷ்யப். ஆனால் இந்த அட்ராசிட்டி செய்யும் ஹீரோக்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.





