குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் பல மாதங்களாக கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஏறக்குறைய 2 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தில் நடிக்காமல் உள்ளார். இதற்கிடையே கார் ரேஸில் சில போட்டிகளில் அவரது அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் லண்டனில் நடந்த கார் ரேஸில் அஜீத் குமாரின் அணி பங்கேற்றது.
அஜீத்தின் கார்ரேஸ்சை மையமாக வைத்து கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த ஆவண படத்தை தியேட்டரில் வெளியிட உள்ளனர். ஏற்கனவே இதன் டிரெய்லர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியிடப்பட்டது.
இப்போது ரசிகர்களின் பார்வைக்காக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் 3.46 நிமிடம் ஓடுகிறது. இதில் அஜீத் குமார் அவரது மனைவி நடிகை ஷாலினி மகள் அனோஷ்கா மகன் ஆத்விக் அஜீத்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் ரேஸ் குழுவில் உள்ள பலரும் கார் ரேஸ் பற்றிய பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
அதில் அஜீத்குமார் பேசும்போது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகம் என்பது ரொம்ப பெரியது. அதில் உள்ள கவர்ச்சியும் ஸ்பீடும் மட்டும் முக்கியமல்ல. இங்கு ஒழுக்கமா துல்லியமா கணக்கு பண்ணி ரிஸ்க் எடுத்து சில நொடிகளுக்குள்ள முடிவுகளை எடுப்பது தான் முக்கியம் என்று அஜீத் குமார் அதில் கூறியிருக்கிறார்.
அதில் ஷாலினி பேசும்போது, எல்லோருக்கும் அஜீத்தை நடிகராக தான் தெரியும். ஆனால் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும் தான் எப்பவுமே அவரது கனவு லட்சியங்களை தேடி போற நபரை தெரியும். தோல்விகளை கண்டு அவர் பயந்ததை நான் பார்த்ததே இல்லை. ஒரே இரவில் வெற்றியையும் அவர் எதிர்பார்த்தது இல்லை.
அவர் திரும்பவும் ரேஸ்சுக்கு வர காரணம் ஜெயிக்கணும் கோப்பை வாங்கணும் என்பதற்காக மட்டுமல்ல, எதுவும் சாத்தியமற்றது அல்ல என்ற அந்த சில நொடி பொழுதுக்காக மட்டும்தான். அவர் ரேஸ் டிராக்கில் இருக்கும் போது எனக்கு பதட்டமாக இருக்கும். ஆனால் அவரின் கனவை பார்க்கும் போது கண்டிப்பாக நான் அவருக்கு துணை நிற்க வேண்டும் என்று ஷாலினி தெரிவித்திருக்கிறார். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர்டெவில் என்ற படத்தில் அஜீத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2ம் தேதி துவங்க உள்ளது.





