தன்னை அவமதிப்பவர்களை எம்.ஜி.ஆர். எப்படி தண்டிப்பார் என்பதற்கு சான்றாக ஒரு சுவையான சம்பவம் நடந்திருக்கிறது. அவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆருக்கு அதில் சிறிய வேடம் தான். ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ஷாட்டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால் தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தை விட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட்கார்ந்திருந்த போது அந்த ஸ்டுடியோவில் பணியாற்றிய அப்பன் என்ற ஊழியர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு சென்றார்.
எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், இருய்யா பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டு போறேன். நீ வேற என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்பும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.
சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை சத்யா ஸ்டுடியோ என்று வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக்காமல் அலட்சியப்படுத்திய ஊழியர் அப்பன் அதே ஸ்டுடியோவில்தான் பணிசெய்து வந்தார். இப்போது அவருக்கு எம்.ஜி.ஆர் தான் முதலாளி.
ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத்தார்.
எம்ஜிஆரை அலட்சியப்படுத்திய அந்த பழைய சம்பவம் மனதில் ஓட, வேலை போச்சு என்ற கவலையுடன் கண்கலங்கியபடியே கும்பிட்டவாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். அவரிடம் உங்களுக்கு எவ்வளவு சம்பளம்? என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 200 ரூபாய் என்று பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.
இந்த மாதம் முதல் உங்களுக்கு 400 ரூபாய் சம்பளம் என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறினார் தலைவர் எம்ஜிஆர். கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இப்படிதான் தனது ஸ்டைலில் பழிவாங்குவார் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்.





