தமிழ் சினிமாவில் பெருமைக்குரிய ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதுவரை 30 ஆண்டுகளில் 15 படங்களை மட்டுமே ஷங்கர் இயக்கியிருக்கிறார். இதில் தலா ஒரு இந்தி படமும் தெலுங்கு படமும் அடங்கியுள்ளது.
ஆனால் கடைசியாக ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் படுதோல்வியை தழுவியது. இந்தியன் 3 படத்தையாவது பெரிய ஹிட் படமாக தர ஷங்கர் கதை திரைக்கதையில் பல மாற்றங்களுடன் இந்தியன் 3 படத்தை உருவாக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் மலையாள சினிமாவின் இளம் எடிட்டர் ஷமீர் முகமது இயக்குனர் ஷங்கர் குறித்து விமர்சித்து பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டில் வெளிவந்த சார்லி படத்தில் எடிட்டராக அறிமுகமானவர் ஷமீர் முகமது. சமீபத்தில் வெளியான இயக்குனர் சேரன் நடித்துள்ள நரி வேட்டை படம் வரை ஏராளமான படங்களில் எடிட்டராக பணிபுரித்து இருக்கிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கியாரா அத்வானி மற்றும் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த கேம் சேஞ்சர் படம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியானது.
ஆனால் நேரடியாக தெலுங்கில் உருவான கேம்சேஞ்சர் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தில் முதலில் எடிட்டராக பணி செய்தவர் ஷமீர் முகமது. பின்னர் அந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற எடிட்டர் சமீர் முகமது இயக்குனர் ஷங்கர் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
எடிட்டர் ஷமீர் முகமது கூறியதாவது, ஷங்கர் சார் பணியாற்றும் விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அது ஒரு திகிலான அனுபவம். நான் எதிர்பார்த்ததை விட கேம் சேஞ்சர் படம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. அதனால் அந்த படத்தில் இருந்து நான் பாதியிலேயே வெளியேறி விட்டேன். படத்தின் முதல் கட்ட நீளம் ஏழரை மணி நேரமாக இருந்தது. அதை 3 மணி நேரமாக குறைத்தேன். பின்னர் வேறு ஒரு எடிட்டர் அதை இன்னும் நேரத்தை குறைத்தார் என்று கூறியிருக்கிறார்.
கேம் சேஞ்சர் படத்திற்கு கதை எழுதிய கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் பேசும்போது, படத்தின் கதை பல்வேறு எழுத்தாளர்கள் மூலம் பலமுறை மாற்றப்பட்டது என்று கூறியிருந்தார். தற்போது படத்தில் இருந்து பாதியில் விலகிய எடிட்டர் ஷமீர் முகமதுவும் ஷங்கர் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதற்கு இயக்குனர் ஷங்கர் ஏதாவது பதில் சொல்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





