தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். 30 ஆண்டுகளில் இதுவரை 15 படங்களை இயக்கி உள்ளார். அதில் 13 தமிழ் படங்கள், ஒரு இந்தி படம் ஒரு தெலுங்கு படம் உள்ளிட்டவை அடங்கும். கடந்த மாதம் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வரவேற்பை பெறவில்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, ரொம்ப எளிமையான படங்கள்தான் நான் டைரக்ட் செய்ய விரும்பினேன். உதிரி பூக்கள் நெஞ்சத்தை கிள்ளாதே என மனதை வருடுகிற மென்மையான படங்களை தந்த இயக்குனர் மகேந்திரன் இயக்கிய படங்களை பார்த்து அந்த இன்ஸ்பிரேஷனில் தான் நான் சினிமாவுக்கே வந்தேன். மகேந்திரன் மாதிரி ஒரு இயக்குனராக ஆசைப்பட்டேன். ஆரம்பத்தில் அது மாதிரியான கதைகளை வைத்துதான் நான் சினிமாவில் முயற்சித்தேன். கதாநாயகியை மையப்படுத்திய ஒரு கதையை இயக்க ஆசைப்பட்டேன்.
ஆனால் அப்போது இருந்த காலகட்டத்தில் என்னிடம் தயாரிப்பாளர்கள் ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்ஸ் இருந்தால் சொல்லுங்க என்று கேட்டனர். அதனால் நான் நெனைச்சது ஒண்ணு, நான் பண்ண வேண்டியது இன்னொண்ணா ஆயிடுச்சு. சரி பண்றதை சிறப்பா செய்வோம் என்று செய்தேன். நான் நினைச்ச மாதிரி அப்படி செய்திருந்தால் இப்போது பிரமாண்டம் என்ற பெயரே எனக்கு வந்திருக்காது.
என் படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் அட என்று ஆச்சரியப்படணும், ரொம்பவும் அசந்து போகணும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால் ஒரு ரசிகனாக அப்படிதான் நான் படங்களை எதிர்பார்த்தேன். அதனால் நான் இயக்குனராகும் போது அந்த மாதிரி தானே படங்களை கொடுக்க வேண்டும் என்றும் நான் நினைத்தேன்.
அந்த மாதிரியான படங்களை செய்வது சவாலாகவும் ஆர்வமாகவும் இருந்தது. எந்த மாதிரியான கதைகளை படமாக்கினால் ரசிகர்கள் வாவ் என்ற மனநிலைக்கு மாறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமானது. எந்த மாதிரியான காட்சிகளை படத்தில் தந்தால் ரசிகர்களை குஷிப்படுத்த முடியும் என்ற எண்ணமும் எழுந்தது.
படம் பார்க்கிற ரசிகனை யோசிக்க வைக்கிற அவனை கண் கலங்க வைக்கிற அவனை சந்தோஷப்படுத்துகிற மாதிரியான விஷயங்களை கதையில் காட்சிகளில் வசனங்களில் லொகேஷனில் இசையில் அவனை திருப்திப்படுத்தும் என்பதால் அந்த மாதிரியான விஷயங்களை என்னுடைய படங்களில் கொண்டு வந்தேன். அதை சவாலாக எடுத்துக்கொண்டு செய்தேன் என்று இயக்குனர் ஷங்கர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





