தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பாராட்டப்படுபவர் இயக்குனர் ஷங்கர். நிறைய வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர். ரஜினி நடிப்பில் சிவாஜி எந்திரன் 2.0 ஆகிய 3 வெற்றிப் படங்களை தந்தார். கமலுக்கு இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருந்தது.
அதுபோல் ஜெண்டில் மேன் முதல்வன் படங்கள் அர்ஜூனுக்கும், அந்நியன் ஐ படங்கள் விக்ரமுக்கும், நண்பன் படம் விஜய்க்கும், ஜீன்ஸ் படம் பிரசாந்துக்கும் காதலன் படம் பிரபுதேவாவுக்கும் அவர்களது திரை பயணத்தில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.
ஆனால் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்களும் பலத்த ஏமாற்றத்தை தந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இதில் அதிதி ஷங்கர் நடிகையாக உள்ளார். விருமன் மாவீரன் நேசிப்பாயா படங்களில் நடித்திருக்கிறார்.
நேர்காணல் ஒன்றில் தனது பிள்ளைகள் குறித்து பேசிய இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, என் படத்தோட ஷூட்டிங் நடக்கும் போது, பாடல் எடுக்கற போது மட்டும்தான் என் பசங்களை படப்பிடிப்பு தளத்துக்கு கூட்டி செல்வேன். மற்ற நாட்களில் சீன் எடுக்கும் போது அழைத்து சென்றால் இது என்ன கதை என்ன கதை என்று என்னை நோண்டிக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால் அதே நேரத்தில் நான் வீட்டில் இருக்கும் போது படம் குறித்து பலமுறை போனில் பேசுவேன். வீட்டுக்குள் போனில் பேசிக்கொண்டே நடந்துட்டு இருப்பேன். அது என்ன ஆச்சு, இது என்ன ஆச்சு டயலாக் மாத்தியாச்சா, அந்த சீன் எடுத்தாச்சா இப்படி நான் கேட்டுக்கிட்டே இருப்பேன்.
அப்படி நான் பத்து தடவைக்கு மேல் போன் பேசறதை கவனித்துக்கொண்டு படத்தின் கதை இதுதான் என்று பசங்களே யூகித்து விடுவார்கள். இதுக்கும் அதுக்கும் கனெக்ட் கொடுத்து அவர்களே ஒரு கதையை உருவாக்கி விடுவார்கள். கடைசியில் இந்த படத்தோட கதை இதுதானே என்று என்னிடமே சொல்வார்கள். அவர்கள் சொல்வதும் கரெக்டாக தான் இருக்கும். எப்படீடா என்று நான் கேட்டால், அதெல்லாம் எங்களுக்கே தெரியும் என்பார்கள் என்று இயக்குனர் ஷங்கர் ஜாலியாக கூறியிருக்கிறார்.





