கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் ஏதும், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் இருந்தது. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இந்தி திரையுலகம், இப்போது தடுமாறுவதாகவும் அங்கு கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதாகவும் பலர் பேசி வந்தனர். மற்ற திரையுலகினரை எப்போதும் வசைபாடும் பாலிவுட் துறையினர், இப்போது எங்கு போய்விட்டார்கள் என்று கேள்வியும் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தான், கடந்த ஜனவரி மாதம் பதான் திரைப்படம் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் சல்மான் கானும் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
துவண்டு கிடந்த பாலிவுட்டை ஷாருக்கான் தூக்கிப்பிடித்து விட்டதாக பலரும் பாராட்டினர். 225 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம், இந்தியாவின் மட்டும் 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு, ஷாருக்கானின் அடுத்த திரைப்படமான ஜவான் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழில் ராஜா ராணி என்னும் வெற்றி திரைப்படத்தையும், விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்களையும் கொடுத்த அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா, பாலிவுட் உலகிற்கு அறிமுகம் ஆகிறார். இதேபோல் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், அதன் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. மேலும், தனது முந்தைய படங்களைப் போல் இதிலும் அட்லி காப்பி செய்து இருப்பதாகவும், விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தின் கதை தான் இது என்றும் கூறப்பட்டது. இதனிடையே சமீபத்தில் ஜவான் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில், விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி முன்னிட்டு கலந்து கொள்கின்றனர். விஜய் பங்கேற்பதாக இருந்த நிலையில், அவர் வெங்கட் பிரபு உடனான படத்தின் டெஸ்ட் சூட்டிங்கிற்காக கலிபோர்னியா சென்று இருப்பதால், அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஜவான் படத்தின் டிரைலர், நாளைக்கு மறுநாள் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் திரையிடப்படுகிறது.





