டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். சசிக்குமார் சிம்ரன் எம்எஸ் பாஸ்கர் ரமேஷ் திலக் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. பெரிய அளவில் வசூலையும் குவித்தது. இந்த படத்தில் ஒரு கேரக்டரில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவிந்த் அடுத்த படத்தை இயக்காமல் ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். வித் லவ் என்கிற அந்த படமும் கடந்தாண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய வசூலையும் அள்ளிக் கொடுத்தது. அதனால் மீண்டும் ஹீரோவாக தனது சினிமா பயணத்தை அபிஷன் ஜீவிந்த் தொடர்கிறது.
இப்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். பாலமுருகன் என்பவரது இயக்கத்தில் அவர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே லவ்வர் குட்நைட் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களில் பணிபுரிந்தவர். மேலும் இந்த படத்தை டிராமா கம்பெனி என்ற பெயரில் அவரே தயாரித்து இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.
வருகிற மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக உள்ள சிவராஜ்குமார் ஏற்கனவே ஜெயிலர் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஏற்கனவே தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. அந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை அவர் தயார் செய்து வரும் நிலையில், அந்த கதையில் ஒருவேளை அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்கலாம். அல்லது வேறு ஹீரோவை நடிக்க வைக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இன்று தமிழ் சினிமாவுக்கு நிறைய ஹீரோக்கள் இருக்கின்றனர். ஆனால் நல்ல இயக்குனர்களுக்கு தான் பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் அபிஷன் ஜீவிந்த் போன்ற இளம் இயக்குனர்கள் தொடர்ந்து படங்களை இயக்காமல் ஹீரோக்களாக நடிப்பது ரசிகர்களுக்கு ஒருவிதத்தில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அவ்வப்போது நல்ல கதைகளை அவர்கள் இயக்கவும் வேண்டும் என்று கூறுகின்றனர்.





