தமிழ் சினிமாவில் இரண்டே இரண்டு திரைப்படங்கள் கொடுத்து புகழின் உச்சிக்கும் பலருக்கும் பரிச்சயமான இயக்குனராகவும் மாறியவர் ராம்குமார். முண்டாசுப்பட்டி தான் இவரது முதல் திரைப்படம். விஷ்ணு விஷால் தான் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். யாருமே கவனிக்கப்படாத வகையில் பத்தோடு பதினொன்றாக தான் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
ஆனால் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து முண்டாசுப்பட்டி பேசப்பட ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல அந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. விஷ்ணு விஷாலுக்கும் ராம்குமாருக்கும் மிகப்பெரிய பிளாட்பார்ம் ஆக அந்த திரைப்படம் அமைந்தது. இத்தனைக்கும் படத்தில் நகைச்சுவை தான் பிரதானமாக இருந்தது.
மூடநம்பிக்கைகளையும், அதில் ஊறிப்போன மக்களையும் தனக்கே உண்டான நகைச்சுவை பாணியில் காட்டி ஆச்சரியப்படுத்தி இருந்தார் இயக்குனர் ராம்குமார். அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இப்படி முதல் திரைப்படத்திலேயே முத்திரை பதித்த ராம்குமார் அடுத்ததாக மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து ராட்சசன் படத்தை இயக்கினார்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் அது அத்தனைக்கும் டாப் ரேஞ்சில் இருப்பது என்னவோ ராட்சசன் திரைப்படம் தான். படம் ஆரம்பித்தது முதல் இறுதி காட்சி வரை ஒரு பரபரப்பும் பதற்றமும் இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும் மாணவிகள் கொலை செய்யப்படும்போது, இருக்கையின் நுணுக்கி நம்மை அழைத்து சென்றிருப்பார் ராம்குமார்.
படத்தில் ஜிப்ரானின் இசையும் கை கொடுக்க, ராட்சசன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 2018 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியான நிலையில் அதன் பிறகு, ராம்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகவே இல்லை. தனுசுடன் அவர் இணையப் போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எடுத்து மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்தார் ராம்குமார்.
சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க முழுக்க முழுக்க காதல் படமாக உருவாக இருந்தது. கொடைக்கானலில் இதற்கான ஷூட்டிங்கை நடத்தினார்கள். எண்பது நாட்கள் படப்பிடிப்பை நடத்த கேட்ட ராம்குமார், கிட்டத்தட்ட 120 க்கும் மேற்பட்ட நாட்களை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனம் கடும் அதிர்ச்சியில் இருக்க, படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டார் விஷ்ணு விஷால். ஆனால் இன்னும் 30 நாட்கள் சூட்டிங் நடத்த வேண்டி இருக்கிறது என்று ராம்குமார் கூறுகிறாராம். அதனால் இப்போதைக்கு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள் சினிமா விமர்சகர்கள்.





