இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கியாரா அத்வானி அஞ்சலி எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த படம் கேம் சேஞ்சர். கடந்த ஜனவரி 10ம் தேதி படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகள் நடந்த நிலையில் தினமும் படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் நடித்தனர்.
இந்த படத்தில் பாடல் காட்சிகளில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் பங்கேற்று பணியாற்றினர். ஆனால் கேம் சேஞ்சர் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த சூழலில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று துணை நடிகர்கள் 350 பேர் குண்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
ஒரு பாடல் காட்சிக்காக 350 துணை நடிகர்களை இணை இயக்குனர் ஒருவர் ஏற்பாடு செய்ததாகவும் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும், ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றியதாகவும் தெரிய வந்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்த பின்பு சம்பளம் வழங்கப்படாததால் பலமுறை கேட்டும் எந்த பதிலும் இல்லாததால், பாதிக்கப்பட்ட துணை நடிகர்கள் அனைவரும் குண்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். துணை நடிகர்களுக்கான சம்பளம் சம்பந்தப்பட்ட ஏஜண்ட்டுகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.
இது அந்த ஏஜண்ட்டுகளுக்கும் துணை நடிகர்களுக்குமான பிரச்சனை, இதற்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் சம்பந்தமில்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. போலீசில் அளிக்கப்பட்ட இந்த புகார் வழக்காக பதிவு செய்யப்படும் பட்சத்தில், இது குறித்து விளக்கம் தரவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பு தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கேம் சேஞ்சர் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், 350 துணை நடிகர்களுக்கு இப்படி சம்பளம் தராமல் ஏமாற்றப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





