இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த சித்தார்த், ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். ஐந்து இளைஞர்களை சுற்றி அந்த படத்தின் கதை நகர்ந்தாலும், முன்னாவாக நடித்திருந்த சித்தார்த்திற்கு, முக்கிய ரோலை இயக்குனர் ஷங்கர் கொடுத்திருந்தார்.
இந்த படத்திற்கு தனது குருவான மணி ரத்னம் படத்தில் அவர் இணைந்தார். சூர்யா, மாதவனை வைத்து எடுக்கப்பட்ட ஆய்த எழுத்து படத்தில், சித்தார்த்திற்கும் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டது. இதன்பிறகு தெலுங்கு படங்களில் அவர் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
நடுவே 180, காதலில் சொதப்புவது எப்படி படங்களில் நடித்த சித்தார்த்திற்கு, உதயம் திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனையை கொடுத்தது. அந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற வில்லை என்றாலும், விமர்சனத்தில் பலரையும் கவனிக்க வைத்தது.
இந்நிலையில் தனது முந்தைய திரைப்படத்திற்கு அப்படியே நேர்மாறாக தீயா வேலை செய்யனும் குமாரு நகைச்சுவை படத்தில் அவர் நடித்திருந்தார். ஜிகர்தண்டா, காவிய தலைவன், எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை என குறிப்பிடத்தக்க படங்களில் சித்தார்த் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி அவ்வபோது சமூக வலைத்தளங்களில் மத்திய அரசுக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், சித்தார்த் தற்போது சித்தா என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை எடுத்துள்ளார். பெண் குழந்தைக்கும், சித்தப்பாவுக்கும் இடையிலான பாசத்தையும், பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதையும் மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பிரஸ் ஷோ திரையிடப்பட்டு, நல்ல விமர்சனத்தை பெற்றது.
படத்தை பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் அருண்குமாரை பாராட்டியிருந்தார். தனது மகாநதி திரைப்படத்தை விட இது சிறப்பாக உள்ளது என்று கமல்ஹாசன் கூறினார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி பாராட்டை பெற்றுள்ளது. இதன் ப்ரோமோஷன் பணிகளுக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது, திடீரென கன்னட அமைப்பினர் உள்ளே புகுந்தனர். சித்தார்த் நிகழ்ச்சியை இடைமறித்த அவர்கள், அவரை சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனர்.
அப்போது காவிரி நீர் பிரச்சனையை குறிப்பிட்ட அவர்கள், இங்கு பந்த் நடந்து கொண்டிருக்கும் போது, இது தேவையா எனக் கூறி அங்கிருந்து செல்லுமாறு கூறினர். அவர்களுக்கு பதில் எதுவும் கூறாமல் நன்றி தெரிவித்து கொண்டு, நிகழ்ச்சியின் பாதியிலேயே சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





