மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் லைப் ஸ்டைல் மாறிவிட்டது என்றே கூறலாம். எதற்கெடுத்தாலும் பில்டப் கொடுக்கும் படங்களை தவிர்த்து விட்டு, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும், முதிர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் சிலம்பரசன்.
மாநாட்டிற்கு பிறகு அவருக்கு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக அதிலும் சிம்புவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து மும்பைக்குச் சென்று தான் பிழைத்துக் கொள்வதிலும், அங்கிருந்து எப்படி ரவுடி ஆகிறார் என்பதிலும் அளவுக்கு மீறாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சிம்பு.
இப்படி இரண்டு திரைப்படங்களுமே அவரது நடிப்பை பறைசாற்றும் வகையில் இருக்க, பத்து தல படமும் சிம்புவின் நடிப்புக்கு சற்று தீனி போடும் விதமாகவே அமைந்தது. ஆனால் அது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.
அதன்பிறகு இப்போது வரை சிம்புவுக்கு என எந்த ஒரு திரைப்படங்களும் ரெடியாகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்கள். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியுடன் சிம்பு இணைவதாக இருந்த திரைப்படமும், சற்று தள்ளிப் போய் இருக்கிறது. இது அவரின் 48வது திரைப்படமாக உருவாக இருந்த நிலையில் தற்போது ஐம்பதாவது படமாக எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் தான் மணிரத்தினத்தின் தக் லைப் திரைப்படம் சிம்புவின் கைகளுக்கு சென்றது. கதையின் நாயகனாக கமல்ஹாசன் நடிக்க துல்கர் சல்மான் படத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகிக் கொள்ள, அந்த இடத்திற்கு தான் வந்து சேர்ந்தார் சிம்பு. படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் சிம்புவின் பங்கு மிகவும் திருப்திகரமாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிம்பு அற்புதமாக நடித்திருக்கிறாராம். அதிலும் ஒரு கார் சேஸின் காட்சி இருக்கிறதாம். அதில் சிம்பு பட்டையை கிளப்பி இருப்பதாக கூறுகிறார்கள். இதேபோல் சிம்புவும் கமல்ஹாசனும் இணைந்து ஒரு பாடலுக்கு போட்டி போட்டு நடனமாடி இருக்கிறார்களாம். இந்தத் திரைப்படம் வந்த பிறகு சிம்புவின் இமேஜ் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவலால் படுகுஷியாகி இருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.





