நடிகர் சிலம்பரசன் தக்லைஃப் படத்துக்கு பிறகு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். ஆனால் அந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் உடனே தயாரிப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த படத்தில் இருந்து சிம்பு வெளியேறி விட்டார். ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்ததாக ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தை இயக்க கமிட் ஆகி விட்டார்.
தக்லைஃப் படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தான் சிம்பு முடிவு செய்திருந்தார். ஆனால் தக்லைஃப் படத்துக்கு கிடைத்த மோசமான வரவேற்பும் வசூலில் கிடைத்த பலத்த நஷ்டமும் மீண்டும் மணிரத்னத்துடன் இணையும் எண்ணத்தை சிம்புவுக்கு தரவில்லை. அதனால் அந்த படத்தில் இருந்தும் சிம்பு விலகி விட்டார்.
இதை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா யோகலட்சுமி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
அரசன் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரத்தில் கோவில்பட்டியில் துவங்கியது. மலேசியாவில் நகை கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகர் சிம்பு, அங்கு கார் ரேஸில் இருந்த நடிகர் அஜீத்குமாரை சந்தித்தார். அதன் பிறகு அங்கு இருந்து நேராக கோவில்பட்டிக்கு சிலம்பரசன் வந்தார். பிறகு கடந்த ஒரு வாரமாக கோவில்பட்டியில் நடந்த அரசன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு கிளம்பிச் சென்றுவிட்டார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்புவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பி விட்டார் என்ற தகவல் வேகமாக பரவியது. ஆனால் உண்மையில் அவருக்கு வயிற்று வலி எதுவும் இல்லை. படப்பிடிப்பை அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்த பிறகே அவர் சென்னைக்கு கிளம்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அரசன் படப்பிடிப்பு முதல் ஷெட்யூலை வருகிற டிசம்பர் 24ம் தேதி வரை நடத்த இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டிருந்த நிலையில், சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் முழுவதும் 4 தினங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. அதனால் அவர் தனது பணியை முடித்த நிலையில் சென்னைக்கு கிளம்பி சென்று விட்டார். அரசன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அதாவது 2வது ஷெட்யூல் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அதாவது ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.





