கோலிவுட் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இங்கு உள்ளது. எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் துவண்டு விடாமல், சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சிம்பு முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். நடுவே சில காலம் அவருக்கு சினிமாவில் எந்த திரைப்படங்களும் வெளியாகாமல் இருந்தது.
இப்படியான சூழலில் மாநாடு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அந்த படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வசூலிலும் சக்கை போடு போட்டது. தொடர்ந்து தோல்வி திரைப்படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த சிலம்பரசனுக்கு, மாநாடு மகத்தான வெற்றியை தேடி வந்து தந்தது.
தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்தார். இதுவும் அவருக்கு ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு நடித்த பத்து தல படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத சூழலில் தற்போது வரை சிம்புவிற்கு அடுத்த படம் வெளியாகவே இல்லை. கிட்டத்தட்ட அவருக்கு திரையரங்குகளில் திரைப்படம் வந்து இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது.
இந்த சூழலில்தான் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தில் கமல்ஹாசன் உடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் சிலம்பரசன். அவருக்கு அமரன் எனும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் வெளிவந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது. குறிப்பாக சிலம்பரசனின் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றன. தந்தையின் இடத்தை அடையத் துடிக்கும் மகனாக அவர் நடித்திருக்கிறார். இருப்பினும் படம் வந்த பிறகு அது அவருக்கான நெகட்டிவ் ரோலா என்பது தெரியவரும். இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிம்பு தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அப்போது அவர் அளித்திருக்கும் பேட்டியில் ஜாலியான சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், இப்போதெல்லாம் பலர் தங்களுக்கு பிடித்த வீடியோவை ஈசியாக கட் செய்து இணையதளத்தில் போஸ்ட் பண்ணி விடுகின்றனர். ஆனால் எங்களது காலத்தில் அப்படி இல்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித் சார் மற்றும் தபு வரும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில், என்ன சொல்லப் போகிறாய் பாடலின் நாதஸ்வர பீட் வரும். அதைப் பார்ப்பதற்காகவே அந்த திரைப்படத்தை 5 முறை பார்த்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.





