நடிகர் விஜய் நடித்த கத்தி படம் மூலம் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தது. தொடர்ந்து கோலமாவு கோகிலா ரோபோ 2.0 பொன்னியின் செல்வன் 1 டான் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தது. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சிவகார்த்திகேயன் சிம்பு தனுஷ் என மாஸ் ஹீரோக்களை வைத்து படம் தயாரித்த லைகாவுக்கு பெரிய வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. குறிப்பாக கமல் நடித்த இந்தியன் 2 சிம்பு நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் ரஜினி நடித்த தர்பார் மற்றும் லால் சலாம் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 பொன்னியின் செல்வன் 2 என பல படங்கள் பலத்த தோல்வியை சந்தித்தது.
மத்த தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பெரிய பட்ஜெட்டை சிறிதும் யோசிக்காமல் நட்சத்திர நடிகர்கள் முன்னணி இயக்குனர்கள் மீது வைத்த நம்பிக்கையால் கார்பரேட் நிறுவனமான லைகா புரடக்சன்ஸ் பல நூற்றுக்கணக்கான கோடிகளை தண்ணீராக செலவழித்து இந்த படங்களை தயாரித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் பெரிய நஷ்டங்களால் அந்நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.
நடிகர் விஜய் மகன் இயக்கும் ஒரு புதிய படம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ஒரு படம் ஆகியவை மட்டுமே கைவசம் உள்ள நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் மூடுவிழா காண உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மும்பையை சேர்ந்த மகாவீர் ஜெயின்ட் பிலிம்ஸ் என்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ள லைகா நிறுவனம், அடுத்து வரும் 3 ஆண்டுகளில் 9 படங்களை தயாரிக்க உள்ளது.
இதில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜீத்குமார் தனுஷ் சிம்பு சிவகார்த்திகேயன் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கும் படங்களும் இருக்கின்றன. இப்போது புதிய தகவலாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போவது இயக்குனர் மணிரத்னம்தான் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் தக்லைஃப் படங்களில் நடித்துள்ள நிலையில் 3வது முறையாக மீண்டும் இந்த படத்தில் இணைய உள்ளனர். இதில் நடிகர் இயக்குனர் உள்ளிட்டோர் சம்பளம் தவிர்த்து படம் மட்டுமே ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக மணிரத்னம் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இதற்கு லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் ஓகே சொல்லுமா, என்பது விரைவில் தகவல் வெளியாகும். தக்லைஃப் வெற்றியும் அதை தீர்மானிக்க அதிக வாய்ப்புள்ளது.





