கடந்த 4 தினங்களாக கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பஞ்சாயத்தாக ஓடிக்கொண்டிருப்பது நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ரவி மோகனின் காதலி என கூறப்படும் கெனிஷா பிரான்சிஸ் ஆகியோரது விவகாரம்தான். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் ஆர்த்தி ரவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்கள் தயாரிப்பாளராக இருப்பவர் சுஜாதா விஜயகுமார். கோலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் இவரது மகள்தான் ஆர்த்தி. கல்லூரியில் படித்த போதே ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், கடந்த 2010ம் ஆண்டில் பெற்றோர் ஒப்புதலுடன் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கடந்தாண்டில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். பிறகு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையே ஹீலர் மற்றும் பாடகி கெனிஷாவுக்கும் ஜெயம் ரவிக்கும் ஏற்பட்ட நெருக்கமே நட்பே தனது மனைவி ஆர்த்தியை அவர் பிரிய காரணம் என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என ஜெயம் ரவி மாற்றிக்கொண்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழா நடந்தது. இதில் பங்கேற்க தனது காதலி கெனிஷா பிரான்சிஸ் உடன் ரவி மோகன் வந்திருந்தார். இருவரும் ஒரே நிறத்தில் பட்டாடையில் புதுமண தம்பதி போல காட்சியளித்தனர். இது இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி, மிக ஆவேசமான ஒரு பதிவை செய்திருந்தார். இதற்கு நடிகைகள் குஷ்பு ராதிகா சரத்குமார் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஐசரி கணேஷ் இல்ல திருமண வரவேற்பு விழாவுக்கும் தன் காதலி கெனிஷாவுடன் மாடர்ன் உடையில் ரவி மோகன் வந்தது மீண்டும் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து ரவி மோகனின் இந்த செயல் இணையத்தில் கடும் விமர்சனமாகி பேசு பொருளாகி மாறியிருக்கிறது.
இந்நிலையில் பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ரவி மோகன் மனைவி ஆர்த்திக்கு பதில் சொல்வது போன்ற சில பதிவுகளை செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்று கெனிஷா கூறியிருக்கிறார்.





